விஜய்யின் ‘என்ட்ரி’: லண்டனிலிருந்து வரும் அண்ணாமலைக்கு சிக்கலா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பாஜகவினரிடையே நிலவியது. ஆனால் பாஜக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த, ஹெச்.ராஜா தலைமையில்ஒருங்கிணைப்பு குழு ஒன்றை மட்டுமே அக்கட்சியின் டெல்லி தலைமை அமைத்தது.
இந்த நிலையில், அண்ணாமலை இம்மாதம் 28 ஆம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் அரசியல் என்ட்ரி…
ஆனால், அதற்கு முன்பாகவே அவரை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருவதாகவும், அண்ணாமலையை மாற்றக் கோரி கட்சித் தலைவர்கள் பலர் ஏற்கனவே டெல்லி மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
” நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் வருகையும், விக்கிரவாண்டியில் அவர் நடத்திய கட்சியின் முதல் மாநில மாநாட்டைத் தொடர்ந்தும் தமிழக அரசியல் சூழல் மாறிவிட்டது. இதனால் தமிழகத்தில் பாஜக-வுக்கான வெற்றி வாய்ப்புகள் மங்கிவிட்டது. எனவே, வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், எதிர்கால வெற்றிக்கும் வலுவான அரசியல் கூட்டணி அவசியம்” என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கமலாலய தகவல்கள் கூறுகின்றன.
அண்ணாமலையை மாற்றக் கோரும் அதிருப்தியாளர்கள்
இது குறித்துப் பேசும் தமிழக பாஜக-வில் உள்ள அண்ணாமலை மீதான அதிருப்தியாளர்கள், “எதிர்காலத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கட்சிக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, பழைய கூட்டணி கட்சியான அதிமுக உடன் சேர்ந்து வலுவான கூட்டணி அமைப்பது அவசியம்” என்று டெல்லி தலைமைக்கு எழுதி உள்ள கடிதத்தில் வலியுறுத்தி இருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி பல முறை தமிழகம் வந்து விரிவான பிரச்சாரங்களை மேற்கொண்டபோதும், பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டதாகவும் சுட்டிக்காட்டும் அவர்கள், இதற்கு, “தமிழகத்தில் பாஜக தனித்து வெற்றி பெறலாம் என்ற அண்ணாமலையின் எதார்த்த நிலைக்கு மாறான அவரது தவறான கணிப்பும், அவரது அரசியல் அனுபவமின்மையுமே காரணம்” என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
” தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்த கட்சியாக அதிமுக தான் திகழ்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாநிலத்தின் 33 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், அண்ணாதுரை உட்பட திராவிட தலைவர்கள் பற்றிய அண்ணாமலையின் தேவையற்ற விமர்சனங்களால் தான் அதிமுக உடனான உறவை இழக்க நேரிட்டது” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
புதிய தலைவர் ஏன் வேண்டும்?
” வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் வலுவான கூட்டணி தேவை. அதற்கு மற்ற கட்சிகளுடன் இணக்கமான உறவைக் கொண்ட புதிய தலைவரால் மட்டுமே பாஜகவுக்கு நன்மை பயக்கும் கூட்டணியை அமைக்க முடியும். எனவே, அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒருவரையே அண்ணாமலைக்குப் பதிலாக நியமிக்க வேண்டும்” என்றும் டெல்லி தலைமையை தாங்கள் வலியுறுத்தி இருப்பதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“மத்திய பாஜக தலைமையானது அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் உறுதியாக உள்ளது. மேலும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தொடர தெலுங்கு தேசம் மற்றும் ஜேடி(யு) ஆகிய கட்சிகள் உடன் கூட்டணி அமைத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜேடி(யு) வின் நிதிஷ் குமார் ஆகிய இருவருமே, முன்பு பாஜக-வை எதிர்த்தவர்கள் தான். ஆனால், அவர்களுடன் கூட்டணி வைத்து நடைமுறை அரசியலுக்கு பாஜக முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த அணுகுமுறை அவசியம். அதாவது அதிமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு கடும் சவாலை உருவாக்க முடியும் ” என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
ஆக மொத்தத்தில், அண்ணாமலை பதவி தப்புமா அல்லது தமிழக பாஜக-வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்பது வருகிற 28 ஆம் தேதிக்குப் பின்னர் தெரிந்துவிடும்.