அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி ரத்து செய்யப்படும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அரியர் எழுதாமல் டிகிரியை இழந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் தேர்வெழுதி டிகிரியைப் பெறலாம்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிகிரி பெறமுடியும். அதன்படி, 2024 நவம்பர்/டிசம்பர் மாதங்களிலும், 2025 ஏப்ரல்/மே மாதங்களிலும் சிறப்பு அரியர் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
தேர்வு கட்டணம் எவ்வளவு?
நவம்பர்/டிசம்பர் மாத சிறப்பு அரியர் தேர்வுக்கு மாணவர்கள் வருகிற 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை https://coe1.annauniv.edu என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சிறப்பு தேர்வு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும். அதே சமயாம், அரியர் வைத்துள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் 225 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக டிடி எடுக்கப்பட்டு வரும் செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு முன்னதாக, ‘அரியர் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம்’ எனக் குறிப்பிட்டு, தபால் மூலமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு மையங்கள்
இதுகுறித்த மேலதிக விவரங்களை https://aucoe.annauniv.edu, https://coe1.annauniv.edu ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மற்றும் ஹால் டிக்கெட், தேர்வு மையங்கள் குறித்த விவரங்களும் இந்த இணையதளங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இத்தேர்விற்கு சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.