Amazing Tamilnadu – Tamil News Updates

அம்மா உணவகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு … புனரமைக்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. 2013 – 16 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. ஆனாலும், அம்மா உணவகங்களின் செயல்பாட்டில் அரசு தலையிடவில்லை. அந்த உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இங்கு இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், கலவை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது, ஏழை, எளிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு லட்சத்து 5,000 பயனாளிகள்

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது. அந்த வகையில், அண்மையில் அரசின் அறிவுறுத்தலின்பேரில், அம்மா உணவகங்களைப் புதுப்பொலிவுடன் மேம்படுத்த சென்னை மாநகராட்சி ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. பழுதான குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி போன்றவற்றுக்குப் பதிலாக, புதியதாக வாங்கி கொடுக்க உத்தரவிடப்பட்டது.

மேற்கூறிய உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து 5,000 பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர், ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது.

இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை வரை சென்னை மாநகராட்சியால் சுமார் 400 கோடி ரூபாயும் , அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக 69 கோடி ரூபாயும் என, மொத்தமாக 469 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இந்த அரசு வழிவகுத்துள்ளது.

முதலமைச்சர் நேரில் ஆய்வு

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி 122 ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு இருந்த பயனாளிகளோடும் உரையாடினார்கள். பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை 7 கோடி ரூபாய் செலவில் வழங்கிட உத்தரவிட்டார். மேலும் 14 கோடி ரூபாய் செலவில் அம்மா உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறும் முதலமைச்சர் அறுவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version