Amazing Tamilnadu – Tamil News Updates

‘அமரன்’ சிறந்த படமா? – இயக்குநர் கோபி நயினார் எழுப்பும் கேள்வி!

தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘அமரன்’ திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்துள்ள சாய் பல்லவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.

அதே சமயம், சில விமர்சனங்களும் எழுந்தன. காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடும் ராணுவத்தினரின் சிரமங்கள் மற்றும் அவர்களது உயிர்த் தியாகத்தைப் பற்றிப் பேசும் இப்படம், அப்பகுதி மக்களின் துயரங்களைப் பற்றி பேசவில்லை என்றும் கூறப்பட்டது.

‘அமரன் சிறந்த படமா?’

இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார், ‘அமரன் சிறந்த படமா?’ என்பது குறித்த கருத்தை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில், “சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர்.

ஆனால், அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது.

நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு” என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்தை ஒரு தரப்பினர் விமர்சிக்கும் நிலையில், இன்னொரு தரப்பினர் சரிதான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version