கடந்த 2014-ம் ஆண்டு, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த போரில் உயிர்த் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனைப் பற்றிய கதை தான் அமரன்.
என்றாலும், அனைவரும் அறிந்த ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதை திரையில் சொன்ன விதத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நம்மை ஈர்த்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன். அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற ராணுவம் சார்ந்த கதை என்றால், போர்க் காட்சிகள், எதிரி நாட்டு தாக்குதல், தீவிரவாதம் என்றே கதை நீளும். ஆனால், இந்த படத்தில் அந்த போக்கை உடைத்து காதலும் கடமையும் கலந்த உணர்ச்சிகரமான காட்சிகளால், இருவரின் தனிப்பட்ட மற்றும் ராணுவ வாழ்க்கை ஊடாக அவர்களின் அழகான காதல் கதையைச் சொல்லி பார்வையாளர்கள் கண்களில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குநர்.
அழகான காதல் கதை ஒருபுறம் இருக்க, ராணுவத்தில் பணியாற்றும் பயங்கரவாத தடுப்பு படைப்பிரிவினரின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறது அமரன் திரைப்படம். ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களின் அன்றாட உண்மைகளை உயிரோட்டத்துடன் விவரிப்பது என்பது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு புதிது அல்ல; அவரது ‘ரங்கூன்’ படத்தில் பர்மாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களின் கதையை சிறப்பாக சித்தரித்திருந்தார். இந்த படத்திலும், களத்தில் நம் இந்திய வீரர்கள் எதிர்கொள்ளும் நடவடிக்கை மற்றும் அவர்களது பதிலடிகளைக் கண்முன் கொண்டுவந்து நம்மை உணர்ச்சி வசப்பட வைத்துவிடுகிறார்.
அவரது இயக்கத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவர் படத்தை சாய் பல்லவியின் கண்ணோட்டத்தில் விவரித்த வித்தியாசமான முயற்சி தான். சாய் பல்லவி அனுபவிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அவரது வலியையும் பெரிய அளவில் நமக்கு கடத்துகிறது படம்.
படத்தின் மையக்கரு காஷ்மீர் பற்றியது என்பதால், அந்த பிராந்திய மோதலுக்குப் பின்னால் உள்ள வரலாறையும் அரசியலையும் இன்னும் கொஞ்சம் விரிவாக பேசி இருக்கலாம். ஆனாலும், காஷ்மீர் பிராந்தியத்தின் கொந்தளிப்பு மற்றும் அதன் அரசியலின் சிக்கலான தன்மைகளை எடுத்துக்காட்டும் தொனியை படத்தில் உணர முடிகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பயங்கரவாதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டும் கேமரா ஒர்க் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ஷன் எபிசோடிற்காக நிறைய பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது கண்ணியமாக தெரிகிறது.
படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்கள் என்றால் அது நிச்சயம் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் தான். முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கணவனாக, தந்தையாக, மகனாக உருகுகிறார். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ராணுவ வீரரின் உடல்மொழியை அப்படியே கடத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது மிடுக்கான உடல்மொழியும், வசன உச்சரிப்பும், அந்த கச்சிதமான ஆக்ஷனும் சிவகார்த்திகேயன் கரியரில் இந்த படம் நிச்சயம் ஒரு புதிய பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும்.
அதேபோன்று சாய் பல்லவி. கணவர் இறந்த போது சாய் பல்லவியின் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. படத்தின் முதுகெலும்பாக நடித்துள்ள சாய் பல்லவி விருதுக்குரிய நடிப்பை வழங்கியுள்ளார். அவர் இல்லாமல் அமரன் முழுமையடையாது என்றே சொல்ல வேண்டும். மொத்த படத்தையும் தன் அழுத்தமான நடிப்பால் தாங்கிப்பிடித்திருக்கிறார். பாசமும் கோபமும் கொண்ட அம்மாவாக கீதா கைலாசம், ராணுவ அதிகாரியாக ராகுல் போஸ், சக ராணுவ வீரராக புவன் அரோரா ஆகியோர் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் புகுந்து விளையாடியுள்ளார். இவை எல்லாவற்றையும் விட இப்படி ஒரு படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு ஒரு சல்யூட்!