தமிழக சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக, இன்று அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்பார்த்தபடியே தோல்வி அடைந்து விட்டது. தீர்மானம் தோல்வி அடையும் தெரிந்தே தான் அதிமுக இதனைக் கொண்டு வந்தது.
என்றாலும், அதிமுக இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்ததன் உள்நோக்கம் என்ன, அதற்கான அரசியல் பலன் கிடைக்குமா, ஆளும் திமுக-வுக்கு இதனால் ஏற்படக்கூடிய எத்தகைய சாதக பாதகங்கள் என்ன, அதிமுக மீதான அப்பாவுவின் எதிர்கால நிலைப்பாட்டில் மாற்றம் வருமா எனப் பல கேள்விகளை எழுப்பி உள்ளன இன்றைய சட்டசபை நிகழ்வு.
சட்டசபையில் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, “சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுகிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய நிலையில், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தம் 63 பேர் வாக்களித்தனர். அதிமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
எடப்பாடி போட்ட கணக்கு
எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த இந்த தீர்மானம் தோல்வி அடையும் என்பது எடப்பாடி பழனிசாமி உட்பட அக்கட்சியினர் அனைவருக்கும் நன்கு தெரியும் என்றாலும், சில கணக்குகளைப் போட்டே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் உள்விவகாரத்தை அறிந்தவர்கள்.
” கட்சிக்குள், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிளவுகளும் ஒற்றுமையின்மையும் தலைதூக்கியுள்ளன. எடப்பாடிக்கு எதிராக கே.ஏ. செங்கோட்டையனின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், இந்தத் தீர்மானம், தொண்டர்களை ஒரு குடையின் கீழ் திரட்டி, கட்சியின் பலத்தை உலகுக்கு உரக்கச் சொல்லும் முயற்சியாகவும் இதை பார்க்கலாம். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களிடையே இப்போதிருந்தே திமுக மீதான எதிர்ப்பு அலையை எழுப்புவதும் இதன் இன்னொரு நோக்கம்.
அப்பாவு, அதிமுக துணைத் தலைவரை அங்கீகரிக்க தாமதித்ததாகவும், அதிமுக-வுக்குப் பேச உரிய நேரம் தரப்படுவதில்லை என்றும், அதிமுக-வினர் பேசுவது ஒளிபரப்பப்படுவதில்லை என்றும் எடப்பாடி குற்றம்சாட்டும் நிலையில், திமுக மீது சர்வாதிகாரி முத்திரை குத்துவதற்கான அவரது முயற்சியாகவும் இதனை பார்க்கலாம். மேலும், திமுகவுக்கு எதிரான தொடர் எதிர்ப்பாக இது வளர்ந்தால், அது அதிமுக தொண்டர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை உற்சாகப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது”. என்கிறார்கள் அவர்கள்.
எதிர்விளைவுகள் ஏற்படுமா?
அதே சமயம், அதிமுக-வின் இந்த நம்பிக்கை இல்லா தீர்மான நடவடிக்கையைப் பார்த்து “மக்கள் சிரிக்கிறார்கள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். மேலும், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தையும் வாக்களிக்க வைத்துள்ளதன் மூலம், திமுக கூட்டணியின் ஒற்றுமை பலத்தை மீண்டும் மீண்டும் உறுதி செய்வதற்கான வாய்ப்பையும், அதிமுகவின் எண்ணிக்கை பலவீனத்தை உலகுக்கு உணர்த்து வாய்ப்பையும் எடப்பாடி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது, எடப்பாடி போட்ட அரசியல் கணக்கு பலனளிக்குமா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும். அதே சமயம், எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தி உள்ள இந்த சூழலில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது அதிமுகவுக்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பின் விளைவுகள் எதையும் ஏற்படுத்துமா என்பதையும் வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்!