வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் சேர்த்து, ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் அக்கட்சிக்கான பழைய வாக்குகள் அப்படியே கிடைக்கும் என பாஜக கருதுகிறது. அந்த நோக்கத்தில் தான், அதிமுக-வில் உள்ள சில முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்களை வளைத்து எடப்பாடிக்கு எதிராக நெருக்கடி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் சமீப நாட்களாக எடப்பாடிக்கு எதிராக பேசி வருவதும் அதன் ஒரு அம்சமே என்றும் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ், சசிகலா, தினகரன்
முன்னதாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன் வைத்த கோரிக்கையையும் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அவர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்த்துக்கொள்ளும் விஷயத்தில் இறங்கி வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எடப்பாடியின் கண்ணசைவில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் சமீபத்தில் அளித்த காட்டமான பேட்டிகளும், அதற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தினகரன் ஆகியோர் கொடுத்த பதிலடிகளும் இருதரப்புக்கு மோதலை மீண்டும் அதிகரித்தது. “சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அதிமுக-வில் பிரிந்து கிடக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது, தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. தேர்தலின் போது, பாஜகவுடன் கூட்டணி பற்றி பேசுவதற்கு முடிவு செய்யப்படும். அதிமுக-வில் உள்ள துாய்மையான தொண்டர்கள் எந்த காலத்திலும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டார்கள். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பேச்சு மற்றும் கருத்துக்கள், வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே பயன்படும்; நடைமுறை அரசியலுக்கு எடுபடாது” என ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.

அதேபோன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ” தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அமமுக உள்ளது. தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பலப்படும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஓரணியாக திரண்டு, 2026 சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவோடு, திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்” எனக் கூறி இருந்தார்.
கதவை திறக்க மறுக்கும் எடப்பாடி
இந்த நிலையில், இவர்கள் மீண்டும் அதிமுக-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கும் விதமாக, ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக-வினருக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “எப்போது தேர்தல் வரும்; ஜெயலலிதா அரசை மீண்டும் அமைக்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என மக்கள் காத்திருக்கின்றனர். இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? அதிமுக தலைமையிலான சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. ஜெயலலிதாவின் சூளுரையை செயல்படுத்தி அதிமுக ஆட்சியை மலரச் செய்வோம். வியத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கு ஏற்ப அயராது உழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக-வின் அஸ்திரம் என்ன?
எடப்பாடியின் இந்த அறிக்கை மூலம், ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது. அதே சமயம், பாஜக இதை இலேசில் விட்டுவிடாது. ஏனெனில் அக்கட்சிக்கு ஒன்றுபட்ட அதிமுக கூட்டணி தேவை.
எனவே பாஜக தரப்பிலிருந்து எடப்பாடிக்கு எதிராக அடுத்து என்ன அஸ்திரம் வீசப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும் சென்னையில் இன்று நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் விழாவில் கூட செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில இரண்டாம் மட்டத் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது எடப்பாடிக்குப் பதிலாக செங்கோட்டையனை அதிமுக தலைமை பொறுப்புக்கு கொண்ட வருவதற்கான உள்ளடிகள் வேலைகள் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவற்றை எடப்பாடி எந்த வகையில் எதிர்கொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்கிறார்க|ள் அரசியல் நோக்கர்கள்!