Amazing Tamilnadu – Tamil News Updates

குடைச்சல் செங்கோட்டையன்… கொந்தளிக்கும் எடப்பாடி… என்ன நடக்கிறது அதிமுக-வில்?

திமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கொடுக்கும் குடைச்சல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது குறித்து அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வத்துடன் எடப்பாடிக்கு மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் ஒருவழியாக தலைமை பதவியைத் தக்கவைத்துக்கொண்டு சமீப சில மாதங்களாக தான் எடப்பாடி பழனிசாமி ஆசுவாசமாக இருந்தார். அதேபோன்று அமமுக தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரையும் மீண்டும் அதிமுக பக்கம் வரவிடாமல் வெற்றிகரமாக பார்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் தான் எடப்பாடிக்கு புது தலைவலியாக செங்கோட்டையன் உருவாகி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்ததாக பழனிசாமிக்கு, அத்திக்கடவு – அவிநாசி திட்டக் கூட்டமைப்பினர் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டபோதிலும், செங்கோட்டையன் புறக்கணித்தது பேசுபொருளானது. “அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடித்தளமாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை” என செங்கோட்டையன் அப்போது தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

குடைச்சலை அதிகரித்த செங்கோட்டையன்

அதன் பின்னர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்விலும் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இதுவும் அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும், எடப்பாடி அண்மையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் 2026 தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காணொலி மூலம் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் செங்கோட்டையன் எதுவும் பேசவில்லை.

இப்படி கட்சிக்குள் இருந்துகொண்டே எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் கொடுக்கும் குடைச்சல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் தான், செங்கோட்டையன் விவகாரத்தில் இன்று கொந்தளித்து தள்ளிவிட்டார் எடப்பாடி.

கொந்தளித்த எடப்பாடி

நடந்தது இது தான்…

2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இன்று காலை தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டசபையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையொட்டி, பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நேற்றும் இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்தக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவற்கு முன்பாக, அதிமுக எம்எல்ஏ-வான செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் தனியாக சந்தித்துப் பேசினார். மேலும், சட்டசபைக் கூட்டத்துக்கு அவர் வழக்கமாக வருகை தரும் வழியே வராமல் கடந்த இரு நாட்களாக வேறு நுழைவாயில் வழியாகவே அவைக்கு வந்து சென்றார்.

இந்நிலையில் தான், பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ” செங்கோட்டையன் கடந்த இரு தினங்களாக உங்களைச் சந்திப்பதை தவிர்க்கிறாரே… என்ன காரணம்?” என செய்தியாளர்கள் கேட்டது தான் தாமதம்…

“அதை அவரிடமே கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்னைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்” எனக் கொந்தளித்து விட்டார் எடப்பாடி.

மேலும், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் இன்று சிலர் வரவில்லை. அவர்களுக்கு வேலை இருக்கும். அதிமுகவில் சுதந்திரமாக அனைவரும் செயல்படலாம். எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். யாரையும் கேட்பதற்கில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில், செங்கோட்டையன் இப்படி தனி ஆவர்த்தனம் வாசிப்பது கட்சியில் அடுத்த பிளவுக்கு வித்திட்டு விடுமோ என அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவலை தெரிவித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version