உலகெங்கும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது வேலைவாய்ப்பை உருவாக்குமா அல்லது இருக்கும் வேலையைப் பறித்துவிடுமா என்ற விவாதம் தொடர்ந்து நீடிக்கிறது.
ஆனால், வேலையில் இருப்போர் அல்லது எதிர்காலத்தில் வேலை தேட உள்ளோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெய்ன் அண்ட் கம்பெனி (Bain & Company) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2027 ஆம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மகிழ்ச்சிக்குரிய அம்சம் தான். மேலும், தொழில் உலகமும் AI ஆற்றல்களை விரைவாக ஏற்றுக்கொள்கிறது. ஆனபோதிலும், அத்துறையில் திறன் வாய்ந்த பணியாளர்கள் குறைவாக இருப்பது பெரிய இடர்பாடாக மாறியுள்ளது.
AI நிபுணர்களுக்கு பற்றாக்குறை
பெய்ன் அண்ட் கம்பெனியின் அறிக்கையின் படி, உலகளாவிய AI திறன் கொண்ட தொழிலாளர்கள் 2024-ல் எட்டு லட்சமாக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டுக்குள் அது 10.8 லட்சமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் அதிகமாக இருப்பதால், 2025-க்குள் 15 லட்சம் AI நிபுணர்கள் தேவைப்படுவார்கள். இது 20 லட்சமாக கூட அதிகரிக்கலாம். ஆனால் AI துறையில் இருக்கும் திறன் மீட்டமைப்பு (reskilling) குறைவாக இருப்பதால், இந்த இடைவெளியை நிரப்புவது கடினமான சவாலாக மாறியுள்ளது.
அதேபோன்று மேற்குலக நாடுகளிலும் AI திறன் பற்றாக்குறை தீவிரமாக உள்ளது. இந்த பற்றாக்குறை இங்கிலாந்தில் 50 சதவீதம், ஜெர்மனியில் 70 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியாவில் 2027-ஆம் ஆண்டுக்குள் 60,000 AI நிபுணர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு சாதகமான நிலை
இந்த பற்றக்குறையினால், உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், திறமையான AI தொழிலாளர்களை உருவாக்குவதில் இந்தியா ஒரு முக்கியமான மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
Google, Microsoft, Amazon, Meta போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் AI துறை சார்ந்து அதிக முதலீடு செய்கின்றன. AI, மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் போன்ற துறைகளில் இந்தியாவுக்குள் பெரிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ஆனால், அதற்கேற்ற வகையில் இந்தியா AI திறனுடன் கூடிய தொழிலாளர்களை உருவாக்குவதை இன்னும் அதிகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
தற்போது, இந்தியாவில் AI சம்பந்தப்பட்ட திறன் கொண்ட தொழிலாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். தற்போது வேலையில் உள்ள பணியாளர்களை AI சம்பந்தப்பட்ட திறன்களுடன் உருவாக்குவது மிக அவசியமாக உள்ளது என்கிறார் பெய்ன் அண்ட் கம்பெனியின் இந்திய பிரிவு தலைவரான சைக்காத் பானர்ஜி.
இந்தியாவில் AI வேலை சந்தை உருவாக காரணிகள்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் (Startups & Enterprises) தரப்பில் AI-யில் அதிக முதலீடு செய்யப்படுகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் இந்திய AI நிபுணர்களுக்கு அதிக தேவை உள்ளது.
இந்திய அரசு AI திறன் மேம்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது – Digital India, National AI Strategy, AI for All போன்ற திட்டங்கள் AI கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை முன்னெடுக்கின்றன.
தொழில் உலகில் புதிதாக உருவாகும் வேலைகளில் மட்டும் அல்லாமல், நிதி (Finance),மருத்துவம் (Healthcare), உற்பத்தி (Manufacturing), வணிகம் (Retail) போன்ற துறைகளிலும் AI பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த துறைகளிலும் AI நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு காத்திருக்கின்றன என்பதே இந்த ஆய்வறிக்கை சொல்லும் தகவல் ஆகும்.