லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் படிப்பை கற்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணமலை சென்றுள்ள நிலையில், ‘அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் உருவாகுமா?’ என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்தப் படிப்புக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் என்பதால், அவர் தமிழகத்தில் இல்லாத இந்த சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, தமிழக பாஜக கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலையில் அக்கட்சியில் உள்ள அண்ணாமலைக்கு எதிரான பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியை தமிழிசை உள்ளிட்டோர் எதிர்பார்த்தனர். அண்ணாமலையின் பிடிவாதத்தால் அது சாத்தியமாகவில்லை. அந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் படுதோல்வியை சந்தித்தன. “இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நாங்கள் ஒரு வியூகம் வகுத்து வைத்திருந்தோம். மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதில் விருப்பமில்லை” என செய்தியாளர் சந்திப்பிலேயே தமிழிசை கோபத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து நடந்த மோதலின் விளைவாக, தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டிக்கும் அளவுக்குச் சென்றது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று (2021 ஜூலை மாதம்) மூன்றாண்டு ஆகிவிட்ட நிலையில், அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், மீண்டும் தலைவராக அவர் நியமிக்கப்படுவாரா என்ற பேச்சும் எழுந்தது.
எடப்பாடி – அண்ணாமலை மோதல்
கூடவே அதிமுக – பாஜக இடையேயான மோதல்களும் தீவிரம் அடைந்துள்ளன. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்து தென்காசி உள்பட சில இடங்களில் அவரது உருவபொம்மையை அதிமுகவினர் எரித்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜனும்ம், “பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால், என்னைப் பொறுத்தவரைத் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பது எனது கோரிக்கை” என்றார்.
மீண்டும் கூட்டணி முயற்சி
அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்துப் பேசிய தமிழிசை, “இனி எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவராகக் கருத்துச் சொல்வதற்கும், முடிவெடுப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. பின்பு அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்படலாம். எனவே மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி?” எனக் கேள்வி எழுப்பினார்.
“இதன்மூலம், 2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிய முடியும்” என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.
இதுகுறித்து பேசும் அவர்கள், “சிறுபான்மையின சமூக ஓட்டுகள், பாஜக தங்களுடன் இருந்த காரணத்தால் தங்கள் பக்கம் வரவில்லை என்ற ஆதங்கமும், தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இயங்கும் பன்னீர்செல்வத்துக்கு பாஜக ஆதரவாக உள்ளது என்ற கோபமும் பழனிசாமிக்கு இருந்தது. மேலும், ‘பாஜக-வுடன் இருக்கும் வரை, திமுக., கூட்டணியில் எந்த பிளவும் வராது. திமுக கூட்டணி பலமாக இருக்கும் வரை பாஜக-வுடன் கூட்டணி என்றாலும், அதிமுக தோற்கும்’ என்ற முடிவிலும் இருந்த பழனிசாமி, பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
அதே நேரம், பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் 18.5 சதவீத ஓட்டுக்களை பெற்றது. பாஜக மட்டும் 11.5 சதவீத ஓட்டுகளை பெற்றதாக அண்ணாமலை பெருமைப்பட்டார். தோல்விதான் ஆனாலும், கவுரவமான தோல்வி என்று டெல்லி பாஜக தலைமைக்கு அண்ணாமலை தெரிவித்தார். இதே ரீதியில், இரு திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக அரசியல் செய்தால், தமிழகத்தில் பாஜக வளரும் என்றும் கட்சித் தலைமைக்கு அறிக்கை கொடுத்தார். அதனாலேயே தோல்விக்குப் பொறுப்பேற்று அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தலைமை விலகச் சொல்லவில்லை.
நெருக்கடியில் அதிமுக
இதனால் ஏற்பட்ட தைரியத்திலேயே, அதிமுக-வையும் பழனிசாமியையும் கடுமையாக விமர்சிக்கிறார் அண்ணாமலை. தற்போதைய நிலை தொடர்ந்தால், அதிமுக-வுக்கு எதிர்காலம் இல்லை என்ற சூழல் உருவாகி, அக்கட்சியினர் மாற்று முகாம் தேடி ஓடுவர். அந்த சூழல் வராமல் தடுக்க வேண்டும் என்றால், அதிமுக-வுக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றிக்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டும்.
இல்லையென்றால், அதிமுக-வில் பிளவை ஏற்படுத்தி, பாஜக தமிழக அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் பணியை செய்யும். தற்போதைய சூழலில், பாஜக-வை விட கடும் நெருக்கடியில் இருப்பது அதிமுக-தான். அக்கட்சி அடுத்து தமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும், அதில் வெற்றி பெற்றாக வேண்டும் இல்லையென்றால், கட்சியே இல்லாமல் போகும். ஒருவேளை இரு கட்சி தலைமைகளின் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டு, கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாலும், அதை இனி மக்கள் ஏற்பார்களா என்று தெரியவில்லை.
மீண்டும் கூட்டணி மலருமா?
அதனால், பெரிய மாற்றங்கள் அல்லது நிகழ்வுகள் ஏற்பட்டால் மட்டுமே இரு கட்சிகளுக்குமான கூட்டணி மலர வாய்ப்புள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தன்னுடைய கூட்டணி கட்சியான பாமக-வை போட்டியிட வைத்து பாஜக தைரியமாக களம் இறங்கி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. ஆனால், அங்கு செல்வாக்குள்ள அதிமுக ஒதுங்கிக் கொண்டது, அக்கட்சித் தொண்டர்களின் மனநிலையை வலுவிழக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், பாஜக – அதிமுக கூட்டணி ஏற்படுவது இப்போதைக்கு இல்லை என்றாலும், ஒருவேளை கூட்டணி அமைந்தாலும், நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்” என மேலும் கூறுகின்றனர்.