இந்தியாவில் மின் கொள்முதல் ஒப்பந்தம் பெற கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் பிற உயர் அதிகாரிகள் சூரிய மின்சார உற்பத்தி திட்டத்தைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2200 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர். இதற்காக அமெரிக்க முதலீட்டாளர்கள் பணத்தை அதானி குழுமம் பயன்படுத்தியுள்ளது என அமெரிக்க பங்குச் சந்தை கண்காணிப்பு ஆணையம் (SEC) குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக, நியூயார்க் நீதிமன்றத்தில் லஞ்ச வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், லஞ்சம் மற்றும் மோசடி வழக்கில், கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது. மும்பை பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சரிவைச் சந்தித்தன.
இதனிடையே, அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்ததோடு, அதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியது. இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளான நேற்று இப்பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அதனை ஏற்க அரசு மறுத்தது. இதனால் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் இந்த பிரச்னை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
கடன் வழங்க யோசிக்கும் அமெரிக்க நிதி நிறுவனம்
இந்த நிலையில், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் (US International Development Fin ance Corporation), இலங்கையில் துறைமுகத்தில் முதலீடு செய்துள்ள அதானி குழுமத்தின் திட்டத்திற்கு கொடுக்க இருந்த 500 மில்லியன் டாலர் கடனை வழங்கலாமா என ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்தின் இந்த முடிவு காரணமாகவும், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டாலும் சர்வதேச மூலதனம், அதானி குழுமத்தை நோக்கி வருவது குறையக்கூடும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதானி குழுமத்தின் நிதி நிலைமை என்ன?
இந்த நிலையில், அதானி குழுமத்தின் நிதி நிலை என்னவாக உள்ளது என்பது குறித்த சந்தேகமும், கலக்கமும் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் நிதிநிலை குறித்து முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் முயற்சியில், அதானி குழுமம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று, முதலீட்டாளர்களுக்கு குழுமத்தின் கடன் அளவு, திருப்பி செலுத்தும் திறன், எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தது.
அப்போது, “அதானி குழும நிறுவனங்கள் அனைத்தும், குறைந்தபட்சம் அடுத்த 12 மாதங்களுக்கான கடனை திருப்பிச் செலுத்த போதுமான இருப்பை வைத்து உள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, குழும நிறுவனங்களின் ரொக்க இருப்பு 53,024 கோடி ரூபாயாக இருந்தது.இது திருப்பி செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த கடன் தொகையில், 21 சதவீதமாகும். மேலும், இது அடுத்த 28 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டிய கடனுக்கு போதுமானது.
குழுமத்தின் மொத்த முதலீடு, தற்போது 5.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கடந்த ஆறு மாதங்களில் மட்டும், குழுமம் 75,227 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதே நேரத்தில் மொத்த கடன் 16,882 கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.