ஆடிப் பெருக்கு விழா இந்த நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் நாளாகும். காவிரி நதி முதலிய நதிகளில் நீர் பெருக்கெடுப்பதை இந்த தினம் குறிக்கிறது.
ஆடிப்பெருக்கு என்றாலே கரை புரளும் காவிரி ஆறு தான் நினைவுக்கு வரும். இந்த ஆண்டும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களில் ‘ஆடிப்பெருக்கு’ விழா இன்று அமோகமாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தாலிச்சரடு மாற்றம்
ஆடிப்பெருக்கு என்கிற ஆடிப்பதினெட்டாம் நாளில், நதிக்கரைகளுக்கு வந்து மக்கள் வழிபடுவார்கள். புதுமணத் தம்பதிகளும் வந்து தாலிச்சரடு மாற்றிக் கொள்ளுவார்கள். இந்த நல்ல நாளில் புது மண தம்பதிகள் மாங்கல்யத்தை பிரித்து கோர்த்து அணிந்து கொள்வதால், மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்கள்.
அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா டெல்டா பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பவானி, ஈரோடு, திருச்சி, திருவையாறு, கும்பகோணத்தில் பூஜைகள் செய்யவும், புனித நீராடவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்பட காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டு வருகின்றனர். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள். இந்த விழா காவிரி தாய்க்காக கொண்டாடப்படும் சிறப்பு விழாவாக பார்க்கப்படுகிறது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படித்துறையில் மக்கள் இறங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் வெள்ளம்கட்டுக்கடங்காமல் செல்வதால் ஆற்றுக்கு பதிலாக பைப் மூலம் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி செல்லும் பாதை முழுவதுமே மக்கள் வெள்ள நீரில் இறங்காத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ஆடிப்பெருக்கு மிக விசேஷமான நாள் என்பதால் கிழமை, நட்சத்திரம், திதி என எதுவும் பார்க்க வேண்டியதில்லை. இதன் காரணமாக காவிரியை நேரில் வழிபட முடியாத மக்கள், காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்து கட்டிக் கொள்கிறார்கள்.
கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்
இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு நாளான இன்று கோயில்களுக்கு மக்கள் அதிக அளவில் செல்கிறார்கள். அம்மனை வழிபாடு செய்வதில் அதிக ஆர்வத்துடன் பெண்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு, காவிரி அன்னையை வழிபட்ட பலனை பெற முடியும். ஆடிப் பெருக்கு வழிபாட்டை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.