Amazing Tamilnadu – Tamil News Updates

விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா… தடதடக்கும் பின்னணி தகவல்கள்!

ரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழக கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு அம்சமாக தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் பட்டியல்களை விஜய் வெளியிட்டு வருகிறார்.

இணைந்த பின்னணி

இந்த நிலையில் தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இன்று தவெக-வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’நிறுவனமும், விகடன் பப்ளிகேஷன் நிறுவனமும் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் நடத்திய அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில், ஆதவ் அர்ஜுனா விஜய்க்கு ஆதரவாக பேசியதோடு திமுகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். திமுகவுடனான கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சனங்களை முன்வைத்ததால், விசிகவில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா விஜய் உடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். இதனால் அவர் தவெக-வில் இணையக்கூடும் என அப்போதே பேச்சு எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யை அவ்வப்போது ஆதவ் அர்ஜூனா சந்தித்து வந்ததாக தகவல்கள் வெளியாயின. சந்திப்பின்போது கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தேர்தலுக்கான உத்திகளை வகுப்பது தொடர்பான ஆலோனையில் இருவரும் ஈடுபட்டதாக கூறப்பட்டது. கடந்த புதன்கிழமை கூட இருவரும் சந்தித்தனர். இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ள தவெக-வின் முதலமாண்டு நிறைவு விழாவின் போது ஆதவ் அர்ஜூனா தவெக-வில் இணைவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், அதிரடி திருப்பமாக ஆதவ் அர்ஜூனா தவெக-வில் இணையப்போவதாக நேற்றே தகவல் கசியவிடப்பட்டது. இந்த நிலையில், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு இன்று வந்த அவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் இணைந்தார்.

ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன பதவி?

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தவெக-வின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

இன்று பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜய் , ஆதவ் அர்ஜூனா

இதன் மூலம், ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ நிறுவனம் தவெக-வுக்கான தேர்தல் பிரசார பணிகளில் இணைந்து பணியாற்றும் என்றும் தெரிகிறது. ஏற்கெனவே தகவல் திமுக மற்றும் விசிக-வில் அவர் மேற்கொண்ட தேர்தல் பணிகளால் கிடைத்த அனுபவங்கள் தங்களது கட்சிக்கு பயன்படும் என தவெக-வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நிர்மல் குமார் ஐடி விங் துணை பொதுச் செயலாளர்

தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், அதிமுக நிர்வாகியான நிர்மல் குமாரும் தவெக பக்கம் தாவியுள்ளது அக்கட்சி தலைமைக்கு பின்னடைவாகவும், தவெக-வுக்கு கூடுதல் பலமானதாகவும் பார்க்கப்படுகிறது.

பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமார், கடந்த 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு தற்போது தவெக-வில் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ( IT Wing) துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த இருவரைத் தொடர்ந்து மேலும் பல்வேறு கட்சிகளில் இருந்து, குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் காளியம்மாளும் விரைவில் விஜய் கட்சியில் ஐக்கியமாவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version