Amazing Tamilnadu – Tamil News Updates

4 விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன் 1’… ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏழாவது முறையாக தேசிய விருது… சிறந்த நடிகை நித்யா மேனன்!

ண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளார், ஒளிப்பதிவாளர் உட்பட பல்வேறு விருதுகள் சிறந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.

அதேபோன்று, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கும் சிறந்த நடனத்திற்காக ஜானி மாஸ்டருக்கும் கிடைத்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மானைப் பொறுத்தவரை, ஏழாவது முறையாக தேசிய விருதை வென்றுள்ளார். இதன் மூலம் இந்திய அளவில் அதிக முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ படத்துக்காக ரிஷப் ஷெட்டி வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனனுடன், ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்த மானசி பரேக் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விருதுகள் குறித்த முழு விவரம் :

சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த சவுண்ட் டிசைன் – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் மற்றும் சதிஷ் கிருஷ்ணன் மேகம் கருக்காத பாடல் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (கே.ஜி.எப் 2)
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம் – மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகி – பாம்பே ஜெய்ரஸ்ரீ (சவுதி வெள்ளைக்கா – மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகர் – ஆர்ஜித் சிங் (பிரம்மஸ்திரா – இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் (மாளிகாபுரம் – மலையாளம்)

ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடம்

‘பொன்னியின் செல்வன் -1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய அளவில் அதிக முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்களில் முதலிடம் பிடித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான முதல் தேசிய விருது கிடைத்தது.அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மின்சாரக் கனவு’, 2001-ல் வெளியான ‘லகான், 2002-ல் வெளியான ’கன்னத்தில் முத்தமிட்டால்’, 2017-ல் வெளியான ‘காற்று வெளியிடை’ ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது.

2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘மாம்’ மற்றும் தற்போது பொன்னியின் செல்வனுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது என மொத்தம் இதுவரை ஏழு விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய அளவில் அதிக தேசிய விருதுகள் வாங்கிய இசைமையமைப்பாளர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.

Exit mobile version