தமிழகம் முழுவதும் உள்ள 6,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தற்போது உள்ள கம்ப்யூட்டர் லேப்புகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில், ஒன்றுக்கு ஒன்று நெட் ஒர்க் இணைப்பு வசதி கிடையாது. இதனால், அதனை பயன்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு தரவுகளை பரிமாற்றம் செய்வதில் சிரமம் ஏற்படுகின்றது. மேலும், வைரஸ் தாக்குதல் போன்ற சவால்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
6029 அரசுப் பள்ளிகளில் LAN நெட் ஒர்க்
அதாவது, 10-க்கும் அதிகமான கம்ப்யூட்டர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளில் லோக்கல் ஏரியா நெட்வொர்க் எனப்படும் LAN நெட் ஒர்க் வசதிகளைச் செய்துகொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 6029 அரசுப் பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் உள்ளன. தற்போதுள்ள செயல்பாட்டு முறையின்படி, இந்த கம்ப்யூட்டர்களைக் கையாளும் ஆசிரியர்கள், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் தனித்தனியாக தரவுகளைப் பதிவேற்றி பராமரிக்க வேண்டும். இதனால், கூடுதல் உழைப்பும் நேரமும் விரயமாகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே, அரசுப் பள்ளிகளில் வரையறுக்கப்பட்ட பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இடையேயான நெட் ஒர்க்கை இணைக்கும் வகையில், லோக்கல் ஏரியா நெட்வொர்க் எனப்படும் LAN நெட் ஒர்க் வசதிகளைச் செய்து கொடுக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம், ஆசிரியர்களும் மாணவர்களும் கணிசமாக பலனடைவார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரவுத்தளங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், LAN சேவையகத்தில் இயங்கும் மென்பொருளைப் பயன்படுத்தி தேவையான பிரின்ட் அவுட்-களையும் எடுத்துக்கொள்ள முடியும். ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் உட்பட நெட்வொர்க்கை நிர்வகிப்பவர்கள், லேப்பில் உள்ள எந்த ஒரு கம்ப்யூட்டரிலும் உள்ள தகவலை படிக்கவோ அல்லது அதில் எழுதவோ முடியும்.
மின்தடையை சமாளிக்க UPS வசதி
அரசுப் பள்ளிகளில் இந்த LAN நெட் ஒர்க் வசதிகளைச் செயல்படுத்த முறையான டெண்டர் மூலம், தகுதி வாய்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தேர்வு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏறத்தாழ 3090 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் 10 கம்ப்யூட்டர்களும், 2929 பள்ளிகள் ஒவ்வொன்றிலும் 20 கம்ப்யூட்டர்களும் உள்ளன.
இந்த நிலையில், LAN நெட் ஒர்க் வசதியுடன் சேர்த்து, கம்ப்யூட்டர்களின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, அனைத்து லேப்-களிலும் தடையில்லா மின்சார வசதி அளிக்கும் UPS -களைப் பொருத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்வு செய்யப்படும் தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க் நிறுவனம் மூலம் LAN இணைப்புகளை நிறுவியவுடன், கம்ப்யூட்டர்களைக் கையாள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.