உலக அளவில் ரயில் பெட்டி தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை, ஐசிஎஃப் ரயில்பெட்டி தொழிற்சாலை ( Integral Coach Factory) உள்ளது. இங்கு, கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலையில், தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயிலின் சேவை, புதுடெல்லி – வாரணாசி இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ல் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, சென்னை – மதுரை வழித்தடம் உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், ஐசிஎஃப் தொழிற்சாலையில் கடந்த மார்ச் மாதம் வரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் மெட்ரோ ரயில்
இதன் தொடர்ச்சியாக 2024-25 ஆம் நிதியாண்டில், 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட மொத்தம் 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் முன்னரே தெரிவித்திருந்தனர்.
அதன்படி, மிக முக்கியமாக ‘ வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ தயாரிக்கும் பணிகள் ஐ.சிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வந்தது. இதில் முதல் ரயில் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
‘ வந்தே பாரத் மெட்ரோ ரயில்’, 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். அதிகபட்சமாக 250 கி.மீ தொலைவுக்குள் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ மூலம் நாட்டில் 124 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான திட்டத்தை ரயில்வே தயாரித்துள்ளது. லக்னோ – கான்பூர், ஆக்ரா – மதுரா, டெல்லி – ரிவாரி, புவனேஸ்வர் -பாலசோர், சென்னை- திருப்பதி உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த வழித்தடங்களில் ஏற்கெனவே இருக்கும் தண்டவாளத்தில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’, மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
இதன் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் போன்றே ஏரோ டைனமிக் வடிவமைப்பு கொண்ட பெட்டிகளாகும். எடை குறைவானவையாகவும் ,குஷன் வசதி கொண்ட இருக்கைகளுடனும் இருக்கும். 7 பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ரயில் பெட்டிகளின் இருபுறமும் மொத்தம் 4 கதவுகள் தானாக திறந்து மூடக்கூடிய வசதியுடனும் வெளிப் புற காட்சிகளைப் பார்த்து ரசிக்கக் கூடிய அளவுக்கு அகலமான பெரிய ஜன்னல்களுடனும் இருக்கும்.
முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் இடையிடையே இணைப்புகள் இருக்கும். இதனால், ரயிலின் உள்ளே சத்தமோ மழை பெய்யும் பட்சத்தில் மழைத்துளிகளோ, வெயிலோ வராமல்இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருபுறமும் இடம்பெறும்.
முன்பதிவு செய்யாமலும் பயணிக்கலாம்
மெட்ரோ ரயில் போன்று இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும். பயணிகள் அதிக அளவில் நின்று செல்லும் வகையில் ரயிலின் மையப்பகுதியில் அதிக இடைவெளி இருக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத பயணிகளும் இந்த ரயிலில் நேரடி டிக்கெட்டில் பயணிக்க முடியும்
ரயில் பயணிக்கும் பாதை விளக்கப்படங்கள், ரயில் மேலாளருடன் அவசரக் காலத்தில் பேசக்கூடிய டாக் பேக் வசதி, சிசிடிவி கேமராக்கள், செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி தீ உணர்வு மற்றும் எச்சரிக்கை அலாரம் ஆகியவை இடம்பெறும். ஒரே வழித்தடத்தில் எதிரெதிரே ரயில் வந்து மோதிக் கொள்ளாமல் இருக்க, தானாகவே எச்சரிக்கை செய்து ரயிலை நிறுத்தும் கவச் நவீன கருவி இடம்பெறும்.