Amazing Tamilnadu – Tamil News Updates

23 வயதில் சிவில் நீதிபதியான முதல் பழங்குடியினப் பெண்… வன தேவதையின் இறக்கையில் பாராசூட் … சாதிக்க உதவிய அரசாணை!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. தொடக்க கல்வியை ஏலகிரி மலையில் கற்றவர், பின்னர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை படித்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே இடையில் திருமணம் நடந்துள்ளது. இதனால் படிப்பு சில காலம் தடைப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், கணவர் தந்த ஊக்கமும் சேர படிப்பை முடித்துள்ளார்.

படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனதால், முதல் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தையும் உருவானது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. வயிற்றில் குழந்தையுடன், இந்த தேர்வில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் எனத் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார் ஸ்ரீபதி. இந்த நிலையில் மருத்துவர்கள் சொன்ன பிரசவ தேதியன்றுதான், தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. என்ன செய்வது என அவர் திகைத்த நிலையில், நல்வாய்ப்பாக தேர்வுக்கு இரு தினங்களுக்கு முன்னரே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி, நல்லபடியாக குழந்தை பிறந்தது.

அதே சமயம், குழந்தை பிறந்ததால் உடலில் வழக்கமாக ஏற்படும் சில சிரமங்கள் ஏற்பட்டபோதிலும், அதையெல்லாம் தாங்கிக்கொண்டு வைராக்கியத்துடன் சென்னை சென்று, சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ’23 வயதிலேயே சிவில் நீதிபதி’ என்ற பெருமையைப் பிறந்த ஊருக்குத் தேடித்தந்துள்ள ஸ்ரீபதியை, அவரது ஊரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், மேளத் தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து சென்று வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஸ்ரீ பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அதே சமயம், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதே ஆண்டு நவம்பர் மாதம், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க அரசாணை வெளியிட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட அந்த ஒற்றை அரசாணைதான், இந்த வன தேவதையின் இறக்கையில் பாராசூட்டைப் பொருத்த உதவியதாக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக, ஐவ்வாது மலையில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஸ்ரீபதியைப் பாராட்டி போட்ட பதிவில், “பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி. இன்று மலையும்,மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம் நீங்கள்.

ஆனால்…….. நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது. ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது.தேர்வுக்கு இரண்டுநாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.”இரண்டாவது நாள் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி வேறெப்படி Safe ஆக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன். மற்றபடி அவர் சென்றாரா இல்லையா என்றுகூட கேட்கவில்லை. யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம்.ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து,வெறும் காரை, பாதுகாப்பான,சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை செல்கிறார். தேர்வு எழுதினார். இதோ வெற்றிவாகையும் சூடியிருக்கிறார். உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் “ஏய் …எப்புட்றா?” என்று சொல்வதற்குமுன் தொண்டைக்குழிக்குள் திக் திக் அடிக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று. அதைவிட பெருமைப்படவும் பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர். புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார். Hats off you Venkat!

அடுத்து…. ஸ்ரீபதியின் தாய். கட்டிக்கொடுத்த ஊரில் இருந்தால் பிழைக்கமுடியாது என்றெண்ணி,தன் சொந்த ஊருக்கே சென்று,அங்குள்ள பள்ளியில் தன்மகளைச் சேர்த்துப் படிக்கவைத்த அவரின் வைராக்கிய குணம்தான் ஸ்ரீபதிக்கு அப்படியே வந்துள்ளது.

இணையேற்பு முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.எல்லோரையும் போல அரசியல் பெருமகனார்கள் “இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்” என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்புறம் பேசியுள்ளனர். இதோ வெற்றியும் கண்டுள்ளார். இனி யாருக்கு வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை.
Anyway…..

யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த, உணர்ந்த, புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்கபலமாகவும் உள்ளது.

நன்றி நவிலல்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று எழுதிவைத்துச் சென்ற எங்கள் முதல்வர் M. K. Stalin க்கு!” எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீபதிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!

Exit mobile version