வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என வெளியாகி இருக்கும் கருத்துக் கணிப்புகள், அக்கூட்டணியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திமுக தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தே தொடர் வெற்றிகளை ஸ்டாலின் குவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் வியப்புடன் பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து சில ஊடகங்கள் நடத்தி உள்ள கருத்துக்கணிப்புகளில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
‘நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி’
இது தொடர்பாக, கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை இந்தியா டுடே – சி வோட்டர் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் அனைத்து தொகுதிகளையுமே திமுக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 47 சதவீத வாக்குகளுடன் திமுக கூட்டணி முதலிடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 25 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், இதர கட்சிகளுக்கு 13 சதவீத வாக்குகளும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ‘டைம்ஸ் நவ்’ கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 59 சதவீத வாக்குகளை இக்கூட்டணி கைப்பற்றும் என்றும், அதிமுக 16 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாகவும், பாஜக 20 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியை கைப்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் வெற்றி சாத்தியமாவது எப்படி?
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலுமே திமுக தொடர் வெற்றியைப் பெற்று வருகிறது. ஆனால், அந்த வெற்றிகளுக்குப் பின்னால் ஸ்டாலினின் கடுமையான உழைப்பும் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையுமே முக்கிய காரணமாக உள்ளது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த நிலையில், அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக-வையும், மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக-வையும் கடுமையாக எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டார். இதன் பலனாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேனி தொகுதியை தவிர்த்து 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களை திமுக பெற்றதால் தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் கவனம் பெற்று, தற்போது ‘இந்தியா’ கூட்டணியிலும் முக்கியத் தலைவராக இடம் பிடித்துள்ளார்.
அரவணைக்கப்படும் கூட்டணி கட்சிகள்
அதே சமயம் அந்த வெற்றி களிப்பிலேயே தேங்கி விடாமல், அதன் பின்னர் வந்த நாட்களில் ‘ஒன்றிணைவோம் வா’, ‘விடியலை நோக்கி பயணம்’ என அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சார யுக்திகளால், அடுத்து நடைபெற்ற ஊராட்சித் தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனால், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் கூட வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலிலும், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளையுமே அப்படியே அரவணைத்து, அவர்களுக்கு உரிய தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்து, அத்தேர்தலில் வெற்றியை அறுவடை செய்து, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக-வை அரியணையில் அமர்த்தினார்.
234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டுமே 133 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர், 2021 அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 93 சதவிகித வெற்றியை திமுக கூட்டணி பெற்றது.
மக்கள் சந்திப்பும் எளிமையான அணுகு முறையும்
இப்படி அடுத்தடுத்த தேர்தல்களில் கிடைத்த தொடர் வெற்றியை, தனது மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, மக்கள் எளிதில் அணுகக் கூடிய வகையிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன. இதனை 2021 சென்னை மழை வெள்ளத்தில் தொடங்கி, 2023 டிசம்பரில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த பெரு மழை வரை காணலாம்.
நல்ல பெயரைத் தரும் நலத்திட்டங்கள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துரிதமான மீட்பு நடவடிக்கைகள், வழங்கப்பட்ட நிவாரணங்கள் போன்றவை மக்களிடையே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதிலும், மழை வெள்ள பேரிடர் நிதி கேட்டு, ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கொடுக்கப்படாத நிலையிலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், மாநில அரசின் நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 6,000 ரூபாய் ரேசன் கடைகள் மூலம் கொடுக்கப்பட்டதும், பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பொருட்களுடன் தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டதும் பாராட்டைப் பெற்றது.
இது ஒருபுறம் இருக்க, மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மாணவிகளின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர்… என ஏராளமான நலத்திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
தொழில், வேலைவாய்ப்பு
இன்னொரு புறம், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், தொழில்துறை வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ஸ்டாலின் மேற்கொள்கிற நடவடிக்கைகளுமே மக்களிடையே உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
இவையெல்லாம்தான், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியை சாத்தியமாக்குவதற்கான முக்கிய காரணங்களாக அமையும் எனச் சொல்லலாம்!