இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகளை எட்டுகிறது. இரண்டு நூற்றாண்டுகாலமாக தனிப்பெரும் இனமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் மூதாதையர்கள் இலங்கையில் உள்ள தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, தமிழ்நாட்டிலிருந்து அப்போதைய பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்டவர்கள்.
இடப்பெயர்ச்சியும் எதிர்கொண்ட இன்னல்களும்
1800 களின் முற்பகுதியில்தான் இந்தியத் தமிழர்கள் முதன்முதலாக இலங்கைக்கு வந்தனர். அப்போது இந்தியா, இலங்கை உள்ளிட்டவை ஆங்கிலேயர் வசம்தான் இருந்தது. இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு காபி மற்றும் தேயிலைத் தேவைகள் அதிகரித்து வந்ததைக் கருத்தில் கொண்டு, அவற்றைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு தோதான இடங்களைத் தேடித் தேடி கண்டறிந்து வந்தனர் ஆங்கிலேயர்கள். அப்படியான அவர்களது தேடுதலில் சிக்கியதுதான் இலங்கையின் மத்திய பகுதியில் இருந்த மலையகப் பகுதிகள். காடுகள் போல் அப்போது தோற்றமளித்தாலும், தேயிலை, காபி பயிரிட சரிவாக உள்ள மலைப்பகுதிதான் சரியான இடம் என்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்தனர்.
சரி இடத்தைத் தேர்வு செய்தாயிற்று… யாரை வைத்து வேலை வாங்கலாம் என யோசித்தபோது, பிரிட்டிஷாருக்கு மலையக தமிழர்கள் சிறந்த தொழிலாளர்களாகக் காணப்பட்டனர்.
இதனையடுத்தே அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதே சமயம் கடல் மார்க்கமான அந்த பயணமே அவர்களுக்கு மிககடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. பல தமிழர்கள் பயணத்தின்போதே நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தனர். உயிர் பிழைத்தவர்கள்தான் அங்கு சென்று இறங்கினர்.
அப்படித்தான் 1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில், வெறும்14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டத்தை ஆங்கிலேயர்கள் தொடங்கினார். பெரும்பாலும் தோட்டங்களில் கடுமையான சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறைந்த ஊதியத்துடன் நெருக்கடியான மற்றும் மோசமான சூழலுடனேயே அவர்களது வாழ்க்கைத்தரம் இருந்தது.
ஆனாலும், எத்தனை இன்னல்களை எதிர்கொண்டாலும் மலையகத் தமிழர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தனர்.
பலனை அனுபவித்த இங்கிலாந்தும் இலங்கையும்
காப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தமிழர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காப்பி தோட்டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் தொடங்கிய நிலையில், இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ததிலும் அவர்கள் முக்கிய பங்காற்றினர்.
இதன் மூலமாக கிடைத்த பலன்களை அப்போதைய ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து, சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அனுபவித்தது, இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கடந்த 200 ஆண்டுகளாக இலங்கை நாட்டுக்காக தங்களது ரத்தத்தையும், வியர்வையையும், உழைப்பையும் வழங்கி, அதன் பொருளாதார வளர்ச்சிக்கும், நலனுக்கும் பெரும் பங்காற்றியுள்ள மலையகத் தமிழர்கள், இன்னமும் அதைத் தொடருகின்றனர். என்றபோதிலும், அவர்கள் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தேவை உண்மையான அங்கீகாரம்
கடுமையாக உழைத்தாலும் தங்களுக்கு இலங்கையில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டு தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் போதுமான அளவில் கிடைப்பதில்லை என்பதும் மலையகத் தமிழர்களின் மனக்குமுறல்களாக உள்ளன.
இந்த நிலையில்தான் மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் இலங்கை அரசின் பங்களிப்புடன் ‘நாம் 200’ என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வு நேற்று தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.
இந்த தருணத்தில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டு கால உழைப்பை உண்மையிலேயே அங்கீகரிப்பது என்பது, இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்களும் இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைக்கப்படுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குச் செய்யும் நியாயமாகவும், நன்றிக் கடனாகவும் இருக்கும்!