தமிழ்நாட்டில், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, 7 லட்சத்து 72,360 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 8,190 பேர் என மொத்தம் 7 லட்சத்து 80,550 மாணவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி, எப்ரல் 2 முதல் 13 ஆம் தேதி வரை தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
மாணவிகளே அதிக தேர்ச்சி
தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44 சதவீதமும், மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவர்களை விட மாணவியர் 4.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வெழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அரசுப் பள்ளிகள் 91.02 சதவீதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. அதே போல் அதிக அளவாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 6,996 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
திருப்பூருக்கு கிடைத்த பெருமை
மேலும் தேர்ச்சி விகிதத்தில், மாவட்ட வாரியாக திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் 97.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து ஈரோடு மற்றும் சிவகங்கை 97.42% பெற்று இரண்டாம் இடமும், அரியலூர் 97.25% பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. இதில் திருப்பூரில் மாணவர்கள் 96.58 சதவீதமும் மாணவிகள் 98.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதோடு அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் 95.75 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது திருப்பூர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தமாக 2,478 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்ச்சி அடையாத மாணவர்களும் நாளை முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.