கடந்த 2021 ஆம் ஆண்டு, மே மாதம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மகளிர்க்கான இலவச பேருந்து திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ போன்றவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
இவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சமூக நலத்திட்டங்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்னும் ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த இலக்கை எய்தும் வகையில் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்புகள் மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறைகள் கொண்டுள்ள ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி திட்டம்’ போன்றவற்றை செயல்படுத்தி வருகிறார்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்
அந்த வகையில், தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப் பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கத்துடன் தன்னார்வலர்களின் உதவியோடு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம்,
சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளைக் குறைத்திடவும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்கும் ‘இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்’, கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றும் வேலைக்கேற்ற திறன் இல்லாதவர்களாகக் காணப்படும் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்,
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்விப் பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’,
‘முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு’
அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டம், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கணினி அறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’,
கல்லூரி மாணவர்களுக்கான ‘மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம்’, ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களையும் மகளிரையும் தொழில் முதலாளிகளாக உயர்த்தும் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’, அரசின் திட்டங்களின் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமையான ‘நீங்கள் நலமா திட்டம்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சொல்லியதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என்று கூறி நடைமுறைப்படுத்தும் பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்வதோடு மக்களின் வாழ்வாதாரமும் உயர்வதாக திமுக தலைமை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.