தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ‘கோட்’ படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக ஒரு படத்துடன் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகப்போவதாக அறிவித்து விட்டார் விஜய்.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியன்று, ‘தமிழக வெற்றிக் கழகம்’என்ற தனது புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய், 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கைக்காக வாட்ஸ்அப், டெலிகிராம், இணைய பயனாளர்களுக்கென தனித்தனியாக ‘க்யூஆர்’ குறியீடை அறிமுகம் செய்து, அதன்மூலம் செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை பணியையும் தொடங்கி வைத்தார். அன்றைய தினம், உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே செயலியை முடங்கும் அளவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினராக சேர விண்ணப்பித்ததாக, அவரது கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெல்ல ஓய்ந்த புதிய கட்சியின் பரபரப்பு
அதன் பின்னர் விஜய்யின் புதிய கட்சி குறித்த பரபரப்பு மெல்ல மெல்ல ஓய்ந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சிப் போட்டியிடாததால், கடந்த இரு மாதங்களாகவே தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் புதிய கட்சி குறித்த பேச்சு எதுவும் பெரிதாக இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் இன்று 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதற்கு முன்னதாக கடந்த 6 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதேபோன்று இன்று வெளியான 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவ/மாணவிகளைச் சந்திக்க திட்டம்
இத்தகைய பின்னணியில்தான், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளை சந்திக்கவிருப்பதாக இன்று அறிவித்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.. மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
விரைவில் நாம் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
வேகமெடுக்கும் அரசியல் பயணம்
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் ஜுன் மாதம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார் விஜய். இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய மாநாடு போல நடந்ததால், அது அப்போது தமிழக அரசியல் களத்தில் கவன ஈர்ப்பாக அமைந்தது. அடுத்ததாக, கடந்த டிசம்பரில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று, நிவாரண பொருட்களை வழங்கிய நிகழ்ச்சியும் அவரது அரசியல் முன்னெடுப்புக்கான கவன ஈர்ப்பாக அமைந்தது.
பொதுவாகவே விஜய்க்கு சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டு. அவரும் அடுத்த தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்தே தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுடனான தற்போதைய சந்திப்பும் அதன் ஒரு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
விஜய், தனது இரண்டாவது பட ஷூட்டிங்கையும் முடித்துவிட்டால், அவரது அவரது அரசியல் பயணம் வேகமெடுத்துவிடும் எனத் தெரிகிறது.