Amazing Tamilnadu – Tamil News Updates

வெளிநாட்டில் வீட்டு வேலை… பெண்களுக்கு உதவ 7 வழிகாட்டு மையங்கள்!

குடும்ப வறுமையைப் போக்க, தமிழக பெண்கள் பலர் வீட்டு வேலைக்காகவும், செவிலியர் பணிக்காகவும் வெளிநாடு செல்கின்றனர். இதில் காதிம் விசாவில் முகவர்களின் உதவியோடு செல்லும் அவர்கள், அங்குள்ள முகவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அந்த முகவர்கள் சில சமயங்களில் தமிழகப் பெண்களை குறிப்பிட்ட தொகைக்கு, மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு என வேலைக்காக விலை பேசி விற்றுவிடுகின்றனர்.

சில சமயங்களில் போலி ஏஜெண்டுகள் வெளிநாடுகளில் சமையல் வேலை , குழந்தைகளை பராமரிக்கும் வேலை போன்ற வீட்டு வேலைகள் காலியாக உள்ளதாகவும், இதற்கு கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என்றும் கூறி, அப்பாவி இளம் பெண்களை ஏமாற்றி அனுப்பி விடுகிறார்கள்.

வெளிநாட்டில் சந்திக்கும் பிரச்னைகள்

பெரும்பாலும் நர்சுகள், கணவனால் கை விடப்பட்ட இளம் பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் ஆகியோரை இந்த போலி ஏஜெண்டுகள் குறி வைக்கிறார்கள். இவ்வாறு வேலை தேடி வரும் பெண்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையைத் தெரிந்துகொண்டு பாஸ்போர்ட் , விசா , போக்குவரத்துக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அடுத்ததாக வேலைக்கு சேர்ந்துவிட்டாலுமே, பணியிடத்தில் சம்பளம் தராமல் அதிகம் வேலை செய்ய வைப்பது, அடித்து துன்புறுத்துவது, பாலியல் தொல்லை உள்ளிட்ட துன்பங்களையும் சிலர் எதிர்கொள்ள நேரிடுகின்றது. அந்த வேலை பிடிக்கவில்லை எனில், அங்கிருந்து வர இயலாத சூழல்களில் இந்த பெண்கள் அங்குள்ள ஏஜெண்டுகளின் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர்.

இது ஒருபுறம் என்றால், போதிய படிப்போ அல்லது ஆங்கில அறிவோ இல்லாத இந்த வகை பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது புதிய இடங்கள், புதிய மனிதர்கள், அங்குள்ள புதிய பழக்க வழக்கங்களைப் பார்த்து திகைத்துப் போகின்றனர். ஒரு வேளை வெளிநாட்டு விமான நிலையங்களில் இறங்கும்போது, சம்பந்தப்பட்ட முகவர்களோ அல்லது வேலைக்கு அமர்த்தும் நிறுவனம் அல்லது நபரின் பிரதிநிதிகளோ விமான நிலையத்துக்கு வராமல் போனாலோ அல்லது வரத் தாமதம் ஆனாலோ, அடுத்து என்ன செய்வது என்பது குறித்தும் அச்சமடைய நேரிடுகிறது.

7 மாவட்டங்களில் வழிகாட்டு மையங்கள்

இதுபோன்ற பிரச்னைகள் நீண்ட நாட்களாக எதிர்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே, அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை விவரங்களை வழங்கும் விதமாக, தமிழகத்தின் 7 மாவட்டங்களில் முன் புறப்பாடு வழிகாட்டு மையங்களை (New orientation centres) திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையில் அண்மையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர் நல அறக்கட்டளை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தேசிய கலந்தாய்வு ஒன்றை நடத்தியது. இதனைத் தொடர்ந்தே தற்போது சென்னைக்கு வெளியேயும் இந்த வழிகாட்டு மையங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாக புலம்பெயர் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையகத்தின் துணை இயக்குனர் கே.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னையில் ஒரே ஒரு வழிகாட்டுதல் மையம் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நிலையில், வெளிநாடு செல்லும் அனைத்து பெண்களும் சென்னைக்கு வர முடியாது என்பதால் ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் வழிகாட்டுதல் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்.

இந்த வழிகாட்டு மையங்களில், வெளிநாடு செல்லும் பெண்களுக்கு அவர்கள் செல்லும் நாடுகளில் உள்ள நடைமுறைகள் பழக்க வழக்கங்கள், அங்குள்ள சட்டங்கள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் பற்றி கற்பிக்கப்படும். கடந்த காலங்களைப் போலல்லாமல், பெண்களிடையே தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த மையங்கள் அவர்களுக்கு அடிப்படை யதார்த்தத்தை புரிய வைக்கும்.

இதனால் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் செல்லும் நாடுகளின் சட்ட விதிகள், பழக்க வழக்கங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டால் அது குறித்து எங்கு எப்படி புகார் கொடுக்க வேண்டும், யாரை நாட வேண்டும் என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், தைரியமாக பயணத்தை மேற்கொள்ள முடியும்!

Exit mobile version