விளையாட்டு வீரர்களுக்குப் பொற்காலம்!
தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டுத் துறைக்கும் இது பொற்காலம் என்று சொல்லலாம்.
சர்வதேச சமூகத்தை அண்ணாந்து பார்க்க வைக்கும் விதத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பாக நடந்தது அந்தப் பொற்காலத்தின் ஒரு மறக்க முடியாத பொழுது. செஸ் ஒலிம்பியாட் விழாவில் தமிழ்நாட்டின் பெருமையும், பராம்பரியமும், வரலாறும் நவீன தொழில்நுட்பத்தில் எடுத்து விளக்கப்பட்டது ஹைலைட்.
செஸ் ஒலிம்பியாட்டைத் தொடர்ந்து, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியை சென்னையில் நடத்தியதை தமிழ்நாடு அரசின், குறிப்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சாதனை என்று சொல்லலாம்.
ஒடிசாவில்தான் ஆசிய சாம்பியன்ஷிப் நடக்கப் போகிறது என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக்கையும் உலக ஹாக்கி மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புப் பொறுப்பாளர்களையும் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் ஹாக்கி போட்டி நடந்தது.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதிலும் உற்சாகப்படுத்துவதிலும் தமிழ்நாடு சற்றும் சளைத்ததில்லை. அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். சர்வதேச கடற்கரை கையுந்து பந்து போட்டி வெளிநாட்டில் நடந்தது. அந்தப் போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராபின், பரத், ஜனனி, பவித்ரா இவர்களின் பயிற்சியாளர்கள் சஞ்சய் ஆகியோரும் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் நான்கரை லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
அவர்களின் விமானக் கட்டணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்காக இந்தத் தொகையை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது. இவர்களில் ஜனனியும் பவித்ராவும் சென்னையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்கள் என்ற செய்தி கூடுதல் சிறப்பு.
அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கவும் தமிழ்நாடு அரசு தவறுவதில்லை. செப்டம்பர் மாதம், கேலோ இந்தியா போட்டியிலும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கங்கள் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2.24 கோடிக்கான உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கியது அதற்கு ஒரு உதாரணம்.
அஜர்பைஜான் நாட்டில் நடந்த FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ரூ. 30 இலட்சமும் நினைவுப் பரிசும் வழங்கிப் பாராட்டப்பட்டார். விளையாட்டு வீரர்களின் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவது ஒருபுறம் என்றால், துயரங்களால் சோர்ந்து போயிருந்தால், அவர்களுக்கு ஆறுதல் வழங்குவதிலும் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.
மணிப்பூரில் நடைபெற்ற கலவரங்கள் காரணமாக அங்கு விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. அவர்களை தமிழ்நாடு வரவேற்றது. இங்கு அவர்கள் பயிற்சி எடுக்க ஏற்பாடு செய்தது. அவர்களும் சிறப்பாகப் பயிற்சி பெற்று நன்றி உணர்வோடு விடைபெற்றனர்.
அதே போல் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் ஆர். பரிதி விக்னேஸ்வரன். அவர் ஒரு விபத்தில் இடதுகாலில் ஒரு பகுதியை இழந்தார். அவரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு 2 லட்ச ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இன்னும் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் – 2′ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டை தங்கம் வென்ற அர்ச்சனா சுசீந்திரனுக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ்செல்வி, ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு 10 லட்சம் நொய்டாவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற எல். தனுஷ், வெள்ளி வென்ற வி. கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ.50,000 சர்வதேச சைக்கிளிங் போட்டியில் கலந்து கொள்வதற்காக வீராங்கனை எம்.பூஜா சுவேதாவிற்கு சைக்கிள் செஸ் போட்டியில் உலகத்தரவரிசையில் 11-ஆவது இடத்தையும், இந்திய அளவில் நம்பர் 1-இடத்தையும் பிடித்து சாதனை படைத்த செஸ் வீரர், கிராண்ட் மாஸ்டர் குகேஷ்சுக்கு 30 லட்சம் ஊக்கத்தொகை என விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கு தமிழ்நாடு அளிக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம்.