உள்ளூரிலேயே வேலை… மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங்களை மாநிலத்தில் தொழில் தொடங்க வரவழைப்பதிலும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், இந்த தொழில் வளர்ச்சியால் கிடைக்கப்போகும் சமூக – பொருளாதார வளர்ச்சி, மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்பதில் மாநில அரசு அதிக கவனத்துடனும் அக்கறையுடனும் உள்ளது.
கடந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் 6,64,180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில், உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன், 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதே சமயம், இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட பல தொழில் நிறுவனங்களும் கரூர், தூத்துக்குடி எனத் தமிழ்நாட்டின் பல நகரங்களில் தொழில் தொடங்க சம்மதித்து, அதற்கான வேலைகளைத் தொடங்கின.
தூத்துக்குடியில் மின்வாகன உற்பத்தி ஆலை
அதன் ஒரு பகுதியாகவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் (VinFast Auto Limited)-ன் மின் வாகன உற்பத்தி (EV manufacturing) ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை, முதற்கட்டமாக 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மின்வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படவுள்ளது.
இது தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இத்திட்டம், தென் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக்கான முதலாவது பெரிய முதலீடு என்பதும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள், இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் டாடா பவர் நிறுவனம் ரூ. 2,800 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது.மேலும் சிங்கப்பூர் செம்கார்ப் நிறுவனம் ரூ.36,000 கோடியிலும், மலேசியா பெட்ரோதாஸ் நிறுவனம் ரூ.30,000 கோடியிலும் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டும் என்பதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பரவலாக்கப்படும் ஐடி பூங்காக்கள்
இதேபோன்று ஐடி துறை சார்ந்த பணிகளையும் மாநிலம் முழுவதும் பரவலாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐடி துறையில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக நகரங்களை உருவாக்கும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மினி டைடல் பூங்காக்கள் திட்டத்தை அரசு அறிவித்தது.
அதில் முதல் மாவட்டமாக விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் ,வானூர் பகுதியில் ரூ.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா, விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்பம், வாழ்வியல் அறிவியல், விண்வெளி, பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர்தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருவதால் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரமாண்ட ஐடி பூங்காவும், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் நியோ டைடல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம், பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சென்னை மற்றும் கோவையில் மட்டுமே செயல்பட்ட ஐடி நிறுவனங்களை, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க வைப்பதன் மூலம், தமிழ்நாடு ஐடி ஹப்பாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், சென்னை மற்றும் கோவையைப் போன்றே தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களும் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படத் தொடங்கி உள்ளன.