Amazing Tamilnadu – Tamil News Updates

இரவிலும் சுற்றிச் சுழன்ற அரசு நிர்வாகம்… மழையைத் தோற்கடித்த சென்னை சாலைகள்!

சென்னையில் நேற்று வெளுத்து வாங்கிய கன மழை அரசு நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் இருந்தபோதிலும், அதனை முறியடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் வரை சுற்றிச் சுழன்று செயல்பட்டதால் வெள்ள நீர் உடனுக்கு உடன் வடிந்தோடியது. இதில் அவர்கள் காட்டிய வேகத்தையும் மீட்பு பணிகளையும் கண்டபோது, மழையை நினைத்து சென்னைவாசிகள் மலைத்து நின்ற நாட்கள் பழங்கதையாகி விட்டதாகவே தோன்றியது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய நிலையில், சென்னையில் நேற்று புதன்கிழமை மழை வெளுத்து வாங்கியது. காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வெளுத்து வாங்கிய மழை

இது எதிர்பார்த்ததது தான் என்பதால், உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் களத்தில் இறங்கி, சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை வேகப்படுத்தினர். அதேபோல் போக்குவரத்து போலீஸாரும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்தனர். மழைக்கு இடையே சென்னை மாநகராட்சியினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் சாலையில் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை.

சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் 21 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டன. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இலேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்ததாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று இரவு பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு, ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலையிலும் 2 முதல் 3 மணி நேரம் வரை இப்பகுதிகளில் விடாமல் மழை பெய்தது.

களத்தில் இறங்கிய அரசு நிர்வாகம்

ஆனாலும் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் என அனைவரும் மழைநீர் தேங்கிய இடங்களுக்குச் சென்று இரவு முழுவதும் ஆய்வு செய்து அதிகாரிகளையும் பணியாளர்களையும் முடுக்கி விட்டனர்.

கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர்…

இன்னொருபுறம் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்பு, மழை நீர் அகற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, மக்கள் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தேங்காத மழை நீர்… பளிச் சாலைகள்

இப்படி அனைவரும் சுற்றிச் சுழன்றதால், சாலைகளில் உடனுக்கு உடன் வெள்ள நீர் வடிந்தோடியது. இதில் மேயர் ப்ரியா நேற்று இரவு முழுக்க ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் அவர் பார்வையிட்டார். அத்துடன் நேரடியாக சுரங்க பாதைகளுக்குச் சென்று அங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று பார்வையிட்டார். மேயர் இப்படி இரவோடு இரவாக மழையில் ரெயின் கோட்டோடு, கையில் வாக்கி டாக்கியோடு பார்வையிட்டதை மக்கள் வியந்து பார்த்தனர்.

ஆய்வு பணியில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா

அதேபோன்று அமைச்சர் சேகர்பாபுவும் நேற்று இரவிலிருந்தே ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆய்வுப் பணிகளுக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, “சென்னையில் நேற்று மாலை 90 நிமிடங்களில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. ரூ. 2400 கோடி அளவில் புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால் மேற்கொள்ளும் பணி முடிவடைந்துள்ளது. இதனால் பரவலாகச் சாலையில் மழை நீர் தேங்கவில்லை.

புளியந்தோப்பு, பட்டாளம் போன்ற பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேல் மழைநீர் தேங்கிய பகுதிகளான சூளை, ஆட்டுதொட்டி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை போன்ற இடங்களில் முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் ஆய்வால் தற்போது தண்ணீர் தேங்காத இடமாக மாறியுள்ளது. எவ்வளவு பெருமழையைச் சமாளிக்கவும் சென்னை முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.

மழை நீர் தேங்காத சுரங்கப் பாதை

எதிர்பாராத கனமழையின் பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வரும் நிலையில், முதலமைச்சர் தொடங்கி ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட்டு மக்களைப் பாதுகாத்தது அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. மொத்தத்தில் சென்னை சாலைகளும் அரசு நிர்வாகமும் மழையின் சவாலை முறியடித்துள்ளன!

Exit mobile version