இன்னொரு திராவிட இயக்கமா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்?
‘நீட்’ தேர்வுக்கு எதிராக நடிகர் விஜய்யிடமிருந்து கிளம்பிய எதிர்ப்புக் குரல் தமிழக அரசியலில் ஏற்படுத்திய பரபரப்பு, அவர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் தனது புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டபோது கூட இந்த அளவுக்கு இருந்திருக்குமா எனக் கேட்கும் வகையில், அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதமே விஜய் தனது கட்சியைத் தொடங்கிவிட்ட போதிலும், ஏப்ரலில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோன்று தனது ஆதரவும் யாருக்குமில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தான் களமிறங்கப்போவதாக தெரிவித்திருந்தார். அதன்படியே அவர் தனது அரசியல் பயணத்தில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வருகிறார். தேர்தலுக்கு சுமார் இரண்டாண்டுகள் உள்ள நிலையில், முதல் தலைமுறை மற்றும் இளம் வாக்காளர்களை குறி வைத்தே அவர் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது.
விமர்சனங்களுக்கு வித்திட்ட கல்வி விருது விழா
இயல்பாகவே விஜய்க்கு சிறுவர்கள் மற்றும் இளம் வயதிலுள்ள ரசிகர்கள் அதிகம். அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக தான் அவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் கல்வி விருது விழாவை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்தி உள்ளார். இந்த ஆண்டு முதற்கட்டமாக, கடந்த 28 ஆம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவின்போது பேசிய அவர், “தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஒரு பெற்றோர் என்ற முறையில் அரசியல் தலைவர் என்ற முறையில் எனக்கு வேதனையாக உள்ளது. அரசை விட நம் வாழ்க்கையை நாம்தான் பார்க்க வேண்டும். எனவே நீங்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி விடக் கூடாது. அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்” என அவர் பேசியது கவனத்தை ஈர்த்தது. அதே சமயம், அந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பான பிரச்னை பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அது குறித்து விஜய் கருத்து எதுவும் தெரிவிக்காதது விமர்சனத்துக்கு உள்ளானது.
இது தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமாக விவாதிக்கப்பட்ட நிலையில், “விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேசுவாரா…? அரசியலைப் பொறுத்தவரை பாம்புக்கும் நோகாமல், அடிக்கும் கம்புக்கும் நோகாமல் மேற்கொள்ளும் அணுகுமுறை வெற்றியைக் கொடுக்காது. அடித்து ஆட வேண்டும். யாரையும், எந்த கொள்கையையும் விமர்சிக்க கூடாது, யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது” என்ற உத்தி வேலைக்கு ஆகாது என்ற ரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
நீட் தேர்வுக்கு எதிராக பேச்சு
இந்த நிலையில் தான், தன் மீதான விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஜூலை 3 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட கல்வி விழாவில், நீட் தேர்வுக்கு எதிரான தனது கருத்துகளை முன்வைத்தார்.
” நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு நீட் விலக்கு மட்டுமே. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த சட்டப்பேரவை தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு இதன் மீது காலதாமதம் செய்யாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிர்ந்து போன பாஜக
இதில் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை தான் வரவேற்பதாக கூறியதும், மத்திய அரசை திமுக பாணியில் ‘ஒன்றிய அரசு’ என்று விளித்ததும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிலும் பாஜக தரப்பு அதிர்ந்து போனது. மேலும், விஜய்யுடன் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் எனக் கணக்குப்போட்டுக் கொண்டிருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி வட்டாரங்களிலும் அதிர்ச்சி வெளிப்பட்டது.
இதனையடுத்து விஜய்யின் நீட் கருத்துக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட அக்கட்சியைச் சேர்ந்த பலரிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ” திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டதன் அடையாளமாக தான், விஜய் நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து பேசியுள்ளார். விஜய் மற்றொரு கமல்ஹாசனாகவும், தமிழக வெற்றிக் கழகம், மற்றொரு மக்கள் நீதி மய்யமாகவும் மாறும்” என்ற ரீதியில் பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பான இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
திராவிட இயக்க பாதையா?
ஆனால் விஜய்யைப் பொறுத்தவரை அவர் தனது அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நடந்த மாணவர் சந்திப்புகளின்போது “அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை விட்டுவிடுங்கள். நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். புதிய தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்” எனப் பேசி, அப்போதே தனது எண்ண ஓட்டம், கொள்கை எப்படி இருக்கும் என்பதை கோடிட்டு காட்டி விட்டார். அதன் தொடர்ச்சிதான் அவரது தற்போதைய நீட் எதிர்ப்பு தொடர்பான பேச்சு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை 1967 ல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை இழந்த பின்னர், திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளின் தயவில்தான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் காலம் தள்ள முடிகிறது. அதே கதைதான் பாஜக-வுக்கும். வட மாநிலங்களில் செல்வாக்காக இருந்தும் தமிழகத்தில் வலுவாக காலூன்ற முடியவில்லை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு கிடைத்த ஒரு சில இடங்கள் கூட அதிமுக உடனான கூட்டணியால்தான் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில், ” இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் 2026 தேர்தலைச் சந்திக்க நினைக்கும் விஜய், தமிழக அரசியலின் ஆழம் அறிந்தே, தமிழர்களின் உணர்வுகளை, மாநில பிரச்னைகளை பிரதிபலிக்கக்கூடிய திராவிட இயக்கங்களின் அரசியல் பாணிதான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். இருப்பினும் வரும் நாட்களில் முக்கிய பிரச்னைகளில் அவர் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார், என்ன கொள்கையை முன்வைக்கப்போகிறார் என்பதிலிருந்து இன்னும் தீர்மானமான முடிவுக்கு வரலாம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
விஜய்யின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்களுடன் காலமும் காத்திருக்கிறது!