Amazing Tamilnadu – Tamil News Updates

விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளும்!

ஜூலை 10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பொன்முடி தலைமையிலான அமைச்சர்கள் குழு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

மேலும் திமுக இளைஞரணி செயலாளாரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி 7 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவாமத்தூர், காணை பனமலைப் பேட்டை, அன்னியூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 8 ஆம் தேதி நேமூர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, அவரது பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை திமுக-வினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இடைத்தேர்தல் என்பதாலும், திமுக-வுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதனாலும் அவரது பிரசாரம் கட்டாயமில்லை என அக்கட்சியினர் கருதுவதாக தெரிகிறது.

விக்கிரவாண்டி மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

இருப்பினும், நேரில் செல்லாவிட்டாலும் விக்கிரவாண்டி மக்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,

விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல; உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்றாண்டு கால ஆட்சியின் நலத்திட்டங்கள்

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!

1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள்.இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம். மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.

‘புதுமைப்பெண் திட்டம்’ மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இதே மாதிரி, மாணவர்களுக்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் மூலமாக தரப் போகிறோம். இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.

பாடம் புகட்டுங்கள்

திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே, சமூகநீதி அரசு. இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர்தான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி. பட்டியலின சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, திமுக ஆட்சி. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, ‘சமத்துவ நாளாக’ அறிவித்திருக்கிறோம்!

எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம். சமூகநீதிக்கு எதிரான பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்குத் துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கழகத்தின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்!

அன்னியூர் சிவா

மறவாதீர், உங்கள் சின்னம் உதயசூரியன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version