விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி காணப்படுகிறது என்றாலும், திமுக – பாமக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதால், அக்கட்சியின் வாக்குகளைப் பெறுவதில் பாமக-வும் நாம் தமிழர் கட்சியும் ஒருபுறம் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னொருபுறம் திமுக, இந்த தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என கங்ஙணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருவதால், தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், விக்கிரவாண்டி தொகுதியிலும் திமுக வேட்பாளராக போட்டியிட்ட என்.புகழேந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புகழேந்தி திடீரென காலமானதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானது. இதையடுத்து, அங்கு ஜூலை 10 ல் இடைத்தேர்தலை நடைபெற உள்ளது.
திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா, பாமக வேட்பாளராக அக்கட்சியின் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளன. இதனால், மும்முனை போட்டி நிலவுகிறது.
அதிமுக ஆதரவைக் கோரிய நாம் தமிழர்
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர்ந்து தனித்தே போட்டியிட்ட நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அந்த கட்சியின் தலைவர் சீமான், இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் அந்த கட்சியினர் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பகிரங்கமாக ஆதரவு கோரினார்.
“அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
வரிந்து கட்டிய பாமக
சீமானின் இந்த நிலைப்பாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக வட்டாரமோ அதிர்ந்து போனது. ஏனெனில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என அக்கட்சி எண்ணுகிறது. அதனால் தான், 2010 ல் நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக-விடம் பாமக தோற்றதிலிருந்து அந்த கட்சி, ‘இனி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை’ என கடைப்பிடித்து வந்த கொள்கையைக் கைவிட்டு இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
இதனால், எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதால் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய மக்களிடையே சாதி பாசத்துடன் பாமக ஆதரவு கோரி வருகிறது.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்னையையும், சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையையும் மையப்படுத்தி திமுக-வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது அக்கட்சி. என்றாலும், களத்தில் நிற்கும் மூன்று பிரதான கட்சி வேட்பாளர்களும் வன்னியர்களாகவே இருப்பதால், வன்னியர்கள் வாக்குகள் சிதறவே அதிக வாய்ப்புள்ளது என்கிறனர் அரசியல் நோக்கர்கள்.
மேடையில் ஜெயலலிதா படம்
இதனை கருத்தில்கொண்டே அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் வளைக்கும் எண்ணத்தில் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சமுதாய ரீதியாக அணுகி, உருக்கத்துடன் ஆதரவு கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது, பாமக பிரசார பொதுக்கூட்ட மேடைகளில் ஜெயலலிதாவின் பேனரும் வைக்கப்பட்டு, அதிமுக-வினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார் அன்புமணி ராமதாஸ்.
அதிமுக தரப்பில் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிலையில், “ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக தான் நாங்கள் பார்க்கிறோம். எனவே தான் அவரது புகைப்படத்தை வைத்தோம்” என்கிறார் பாமக வழக்கறிஞர் பாலு.
அதிமுக நிலைப்பாடு என்ன?
ஆனால் ஜெயலலிதாவை ஊழல்வாதி என அழைத்த பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பாமக-வுக்கு அவரது புகைப்படத்தை பயன்படுத்த உரிமையில்லை என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே பாமக இதைச் செய்வதாகவும் கூறுகிறார்கள் அதிமுகவினர். அத்துடன் தேர்தலை புறக்கணிப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், நாம் தமிழர் உட்பட மற்ற கட்சியின் பக்கம் தங்கள் கட்சித் தொண்டர்கள் சாய மாட்டார்கள் என்றும் அவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.
திமுகவின் தெம்பு
இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக, ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரத்தில் வெற்றி பெற்ற வி.சி.க., விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், அதிமுக பெற்றதை விட, சுமார் 6,800 ஓட்டுகள் அதிகம் பெற்றதாலும் இந்த முறையும் வெற்றி தங்களுக்கே என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அத்துடன், அமைச்சர் பொன்முடி தலைமையில் அமைச்சர்கள் பட்டாளமும் களம் இறங்கி தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், கடந்த 3 ஆண்டுக்கால முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கூடவே, வன்னியர் வாக்குகள் மூன்றாக பிரிவதாலும், தொகுதியில் கணிசமாக உள்ள தலித் மக்களின் பெரும்பாலான வாக்குகள் திமுகவுக்கே போகும் என்பதாலும், வலுவான கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதாலும் தேர்தல் முடிவு திமுக-வுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.