நாட்டின் வறுமை நிலை தொடர்பாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தமிழ்நாடு வறுமையை ஏறக்குறைய அறவே விரட்டிவிட்டது என்ற சொல்லத்தக்க அளவில் நல்ல முன்னேற்றமடைந்திருப்பது ‘தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு’ (National multidimentional poverty index – 2023) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்ட பல பரிமாண வறுமை குறியீட்டுப் பட்டியலில், ஏழ்மை நிறைந்த மாநிலமாகப் பீகார் முதல் இடத்தில் உள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய பரிமாணங்களை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் இளம்பருவ இறப்பு, குழந்தை பிறப்பின் போது தாயின் ஆரோக்கியம், பள்ளிப் படிப்பு ஆண்டு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீட்டு வசதி, சொத்து, வங்கிக்கணக்கு ஆகிய 12 அம்சங்கள் இதில் அடங்கும்.
வட மாநிலங்களில் அதிக வறுமை நிலை
அப்படிக் கணக்கிடப்பட்டதில் பல பரிமாண வறுமைக் குறியீட்டில், மாநிலங்கள் வாரியாக மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நாட்டிலேயே அதிகமாகப் பீகாரில் 33.76 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, பிற மாநிலங்களைக் காட்டிலும் மிக மிக அதிகமாகும்.
பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் 28.81 சதவீதத்துடனும், மேகாலயா 27.79 சதவீதத்துடனும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. அனைத்து மாநிலங்களையும் போலவே, இம்மாநிலங்களும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நல்ல விதமான வளர்ச்சியையே அடைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களுக்கும் அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 22.93 சதவீதம் பேரும் ( நான்காவது இடம்) , மத்தியப்பிரதேசத்தில் 20.63 சதவீதம் பேரும் ( ஐந்தாம் இடம்) ஏழ்மை நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழ்மை குறைந்த தமிழ்நாடு
இப்படி பல பரிமாண வறுமை குறியீட்டுப் பட்டியலில் வட மாநிலங்கள் பல மோசமான நிலையில் உள்ள அதே நேரத்தில், தமிழ்நாடு ஏழ்மை குறைந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் வெறும் 2.2 சதவீதம் பேர் மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் பல பரிமாண வறுமை குறியீடானது நகர்ப்புறத்தில் 1.41 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 2.9 சதவீதமாகவும் உள்ளது.
மேலும், மேலே குறிப்பிட்ட 12 விதமான பிரிவுகளில் தமிழ்நாட்டினை பொறுத்த அளவில் கல்வி தொடர்பான தரவுகளை ஆய்வு செய்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. கொரோனா காலத்தில், ஏழை எளிய பள்ளி மாணவர்கள் பலர் வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாமல், இடைநிற்றல் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்தது.
இதனைச் சரி செய்ய, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் எவ்வளவு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகும் தரவுகளின் அடிப்படையில் தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோன்று கேரளாவில் வெறும் 0.55 சதவீதம் மக்கள் மட்டுமே வறுமையில் உள்ளனர். இந்தியாவிலேயே குறைந்த அளவு இருப்பது கேரளாவில் தான் என அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.