Amazing Tamilnadu – Tamil News Updates

தேசிய டாக்டர்கள் மற்றும் ஆடிட்டர்கள் தினம்: சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த ரோட்டரி மாவட்டம் 3233

தேசிய டாக்டர்கள் மற்றும் ஆடிட்டர்கள் (பட்டய கணக்காளர்கள்) தினத்தை முன்னிட்டு, அத்துறைகளில் சாதனை புரிந்த மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கவர்னர் மகாவீர் போத்ரா

ரோட்டரி மாவட்டம் 3233 ன் கவர்னராக மகாவீர் போத்ரா கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி அன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவரது தலைமையிலான முதல் நிகழ்ச்சியாக சென்னை, தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய டாக்டர்கள் மற்றும் ஆடிட்டர்கள் தினத்தையொட்டி, இவ்விரு துறைகளிலும் சாதனை புரிந்த தலா 5 மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விருது வழங்கியவர்கள்

ஜூலை 1 அன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தி இந்து குழுமத்தின் இயக்குனர் என். ராம் தலைமை விருந்தினராகவும், எஸ்.ஐ.ஆர்.சி தலைவர் கீதா, வி.எச்.எஸ் செயலர் டாக்டர் எஸ். சுரேஷ் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். மேலும், டாக்டர்கள் தின தலைவர் ரோட்டேரியன் டாக்டர் மோகன் ராஜன் மற்றும் ஆடிட்டர்கள் தின தலைவர் ரோட்டேரியன் ஆடிட்டர் இளன்குமரன் மற்றும் மாவட்ட செயலாளர்களான ரோட்டேரியன் டாக்டர் எஸ். ராம்குமார், ரோட்டேரியன் செந்தில் குமார் ஆகியோரும் பங்கேற்று, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

விருது பெற்ற சாதனையாளர்கள்

இதில் டாக்டர்களுக்கான சாதனையாளர்கள் விருது பல்ராம் பிஸ்வகுமார், சின்ன சாமி, கந்தையா ரங்கசாமி, பிரித்திகா சாரி, வெங்கட கிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

அதேபோன்று ஆடிட்டர்களுக்கான சாதனையாளர்கள் விருது டாக்டர் சின்னசாமி, வி. பட்டபிராம், எல். ரவி ஷங்கர், ரேவதி ரகுநாதன் மற்றும் எஸ். சந்தான கிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

மூன்று தெய்வங்கள்

மகாவீர் போத்ரா

நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் மகாவீர் போத்ரா, “வாழ்க்கையில் ஆசிரியர், மருத்துவர், கணக்கர் ஆகிய மூன்று பேருமே தெய்வங்கள். இந்த மூன்று பேர்களிடம் பொய் சொல்லக்கூடாது.

உலக அளவில் இலாபம் அற்ற அமைப்பாக செயல்படக்கூடிய அமைப்பு ரோட்டரி சங்கம். இதில் 14 லட்சம் பேர் உறுப்பினர்களாகவும், 550 பேர் கவர்னர்களாகவும் உள்ளனர். அதில் நானும் ஒருவனாக உள்ள நிலையில், நமது மாவட்டம் சார்பில் ஏதாவது சிறப்பாக ஒன்றை செய்ய வேண்டும் என்று எண்ணி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற நீங்கள் அனைவரும் தான் காரணம். உங்கள் ஆதரவு இருந்தால் எல்லா நிகழ்ச்சிகளையும் நல்லவிதமாக நடத்த முடியும். ஆண்டவர் அருளால் அது நிச்சயம் நடக்கும்.

அதற்கு முதல் உதாரணமாக, வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று சிறப்பு தரிசனமாக திருப்பதி பெருமாள், அவரை வந்து பார்க்க சொல்லி இருக்கிறார். இந்த மாவட்டம் சார்பாக செய்யும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சமுதாயத்துக்கான சேவையாக சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கிறோம்.

டாக்டர்களுக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது என்றால், கோவிட் சமயத்தில் அவர்கள் ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காகத்தான். டாக்டர்கள் அனைவரும் ஒரு குழு அமைத்து நிறைய உதவி இருக்கிறார்கள். அதேபோன்றுதான் ஆடிட்டர்கள். எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் தாராளமாக பிசினஸ் செய்யுங்கள் எனத் தைரியமூட்டுவார்கள்” என்றார்.

வேண்டுகோள் விடுத்த என்.ராம்

நிகழ்ச்சியில் பேசிய என். ராம், அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால், டாக்டர்களுக்கு அவர்களுக்கான நேரம் அவர்களுக்கு சொந்தமானதாக இருப்பதில்லை என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய நீட் தேர்வு சர்ச்சையைக் குறிப்பிட்டு பேசிய அவர், இது நம்பிக்கையின் அடித்தளத்தை அசைப்பதாகவும், மூலாதாரம் மாசுபட்டால், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு மேலே வர நினைக்கும் மக்களின் கதி என்னவாகும் என்றும் கவலை தெரிவித்ததோடு, இன்று கவுரவிக்கப்பட்டு விருது பெற்ற சாதனையாளர்கள், இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தாம் கேட்டுக்கொள்வதாக கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், “இது 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு. ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஊழல் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் அகில இந்திய அளவில் தேர்வை நடத்துவது சாத்தியமா என்பது தனக்கு மிகவும் சந்தேகம் தருவதாக உள்ளது. இது போன்ற ஒரு நிகழ்வுகளில் இத்தகைய கவலைகள் பதிவு செய்யப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

‘டாக்டர்களும் ஆடிட்டர்களும் சமூகத்தை வடிவமைப்பவர்கள்’

தன்னார்வ சுகாதார சேவைகளின் கெளரவ செயலாளர் எஸ்.சுரேஷ் பேசுகையில், சமூகத்தை வடிவமைப்பதில் டாக்டர்கள் மற்றும் ஆடிட்டர்கள் இருவரது பங்களிப்பும் இருப்பதாக குறிப்பிட்டார்.

டாக்டர்கள் தினத்தின் தலைவர் மோகன் ராஜன் பேசுகையில், “இந்தியாவில் மருத்துவர்கள் திறமையானவர்கள் மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்கக்கூடியவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் உள்ளனர்” என்றார்.

Exit mobile version