Amazing Tamilnadu – Tamil News Updates

ரூ. 6,000 வெள்ள நிவாரணம்: சென்னையில் ரேசன் அட்டை இல்லாதவர்கள் வாங்குவது எப்படி?

சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ரூ. 6,000 வெள்ள நிவாரண தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, சென்னை முகவரியில் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

இந்த மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த பெரு மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அந்த வகையில், திருவொற்றியூர், பெரம்பூர், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன.

இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக தமிழ்நாடு அரசு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாங்குவது எப்படி?

இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் வசிக்கக்கூடியவர்களில் கணிசமானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வேலை மற்றும் பிழைப்பு நிமித்தம் இங்கு தங்கியிருக்கும் இவர்களில் பலரது ரேசன் அட்டைகள் அவர்களது சொந்த ஊர் முகவரியிலேயே உள்ளது.

ஆனால், நிவாரண தொகையான 6,000 ரூபாய் ரேசன் கடைகள் மூலமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை முகவரியில் ரேசன் அட்டை இல்லாதவர்கள், தங்களுக்கு இந்த தொகை கிடைக்காதோ எனக் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால் சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கக்கூடிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வெளி மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம். வெள்ளத்தால் பாதித்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரண விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும்.

இந்த நிவாரண விண்ணப்பத்தில் வங்கி எண், இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் குறித்து முடிவு செய்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version