ரூ. 4000 கோடி குற்றச்சாட்டும் சென்னை மாநகராட்சி சொல்லும் உண்மை நிலவரமும்!
மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக சென்னை மாநகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பல அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சியின் களப்பணியாளர்கள், மீட்புக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இரவு பகல் பாராமல் சுற்றிச் சுழன்றதால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியது.
அதிகாரிகளும், பேரிடர் மீட்புக்குழுவினரும் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றுதல், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். அதே சமயம் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், முடிச்சூர், பெரம்பூர், வியாசர்பாடி, திருவொற்றியூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், “சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக தி.மு.க அரசு கூறியது என்னவாயிற்று..?” என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தரப்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மாநகர நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இது தொடர்பாக அளித்த பேட்டியில், “மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள 3,000 கோடி ரூபாய்க்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி இன்று விரிவாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் கீழே…