ராமர் கோயில் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ள இயக்குநர் பா. ரஞ்சித், “இந்தியாவை மோசமான காலக்கட்டத்தை நோக்கி தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலையை நாம் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
பா. ரஞ்சித்திடம் ‘காலா’ உள்ளிட்ட படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெயக்குமார், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை அவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கீர்த்தி பாண்டியன், “பா.ரஞ்சித் படத்தை தயாரிக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே ‘என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா?’ என்று கேட்கிறார்கள். அரசியல் பேசினால் என்ன தவறு?. நாம் உண்ணும் உணவு உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
எல்லாப் படங்களில் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பா.ரஞ்சித் பேசும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, ‘காலு மேல காலு போடு ராவணகுலமே’ என்று பாடத் தோன்றுகிறது” என்று பேசியது தமிழ்த் திரையுலக வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினி கருத்தும் ரஞ்சித்தின் ஆதங்கமும்
இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் அது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பான தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
“இன்று மிக முக்கியமான நாள் ( ராமர் கோயில் திறப்பு). மிகவும் தீவிரமான ஒரு காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும், 5, 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில் நாம் நுழைவதற்கு முன்பாக நம்மை நாமே பண்படுத்திக்கொள்ள வேண்டும்.
மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும், மதவாதத்தையும் அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கலையை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறோம். பிற்போக்குத்தனங்களை கலை அழிக்கும் என நம்புகிறோம். இந்தியாவை மோசமான காலக்கட்டத்தை நோக்கி தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலையை நாம் செய்ய வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமர் கோயில் திறப்புக்கு பின்னால் இருக்கும் மத அரசியலை கவனிக்க வேண்டியுள்ளது. மதச்சார்பின்மையை கொண்ட இந்தியா எதை நோக்கி நகர்கிறது என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியுள்ளது. கோயில் கூடாது என்பது நமது பிரச்னையில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பது தான் நம் கவலை.
இந்தியாவில் இப்படி ஒரு கோயில் திறப்பது அரசியலாக்குவதுதான் சிக்கல். நடிகர் ரஜினிகாந்த் கோயிலுக்குச் சென்றது அவருடைய விருப்பம். ஆனால், 500 ஆண்டுகள் பிரச்சினை தீர்ந்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அவர் கூறியது சரியா, தவறா என்பதைத் தாண்டி அவரது கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது” என்றார் ரஞ்சித்.
பா. ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் வெவ்வேறு ரியாக்சன்கள் வெளிப்பட்டுள்ளன.