Amazing Tamilnadu – Tamil News Updates

யுமாஜின் 2024: ஏஐ, அனிமேஷன், காமிக்ஸ்… ‘ஐடி துறையில் தமிழ்நாடு நம்பர் 1 ஆகும்’

யுமாஜின் 2024 (UmagineTN 2024) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை, சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில், இரண்டு நாள் நடைபெற உள்ள இம்மாநாட்டின் கருப்பொருள் என்ன, எவை குறித்து விவாதங்கள் நடைபெறுகிறது என்பது குறித்த விவரங்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்டக் கூட்டத்தொடரின் போது, “யுமாஜின் (UMAGINE) – வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை” சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது “UmagineTN” மாநாடு 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “UmagineTN 2024” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ஏஐ, அனிமேஷன், காமிக்ஸ் குறித்து விவாதம்

இந்திய தொழில் கூட்டமைப்புடன் (Confederation of Indian Industry-CII) இணைந்து நடத்தப்பெறும் இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பம் (Deep Tech), இணையப் பாதுகாப்பு (Cyber Security), இணைக்கப்பட்ட நுண்ணறிவு (Connected Intelligence), நிலைத்தன்மை (Sustainability), உலகளாவிய கண்டுபிடிப்பு மையங்கள் (Global Innovation Centres) மற்றும் உயிர்ப்பூட்டல் (Animation), காட்சி விளைவு (Visual Effects), விளையாட்டு (Gaming) மற்றும் களிப்படக் கதை (Comics) (AVGC) மெய்மை விரிவாக்கம் (Extended Reality) போன்ற முக்கியப் பொருண்மைகள் குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளது.

கருப்பொருள் என்ன?

இந்த UmagineTN 2024 நிகழ்வின் கருப்பொருள் AT’TN – அதாவது, தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தல் ஆகும். 120 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வின்போது வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

‘ஐடி துறையில் தமிழ்நாடு நம்பர் 1 ஆகும்’

இந்த நிலையில், யுமாஜின் 2024 மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக பணியாற்றி பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் என்று பாராட்டியதோடு, நிதித் துறை போல ஐடி துறையிலும் மாற்றங்கள் தேவைப்பட்டதால்தான், அவரை ஐடி துறைக்கு மாற்றியதாக தெரிவித்தார். மேலும், அவரது தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும் என்றும், இந்த துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

“கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே, வரும் காலம் கணினி காலம், தொழில்நுட்ப காலம் என்று கணித்தவர் கலைஞர். நாட்டின் முதல் ஐ.டி. பார்க்கை டைடல் பூங்காவில் 2000-ல் உருவாக்கினார் கலைஞர். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்” எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், “2 கனவுகளை நனவாக்க என்னையே நான் அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன்.

தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும். உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையினர் தேடி வரும் நகரமாக ஆக்குவோம். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் உருவாக்க உழைப்போம்” என நம்பிக்கையுடன் முடித்தார்.

Exit mobile version