சென்னையில் மெட்ரோ ரயில் எட்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, இப்போதுவரையில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலின் பெரும்பகுதியைத் தனது தலைமேல் சுமந்து, பூமிக்கடியில் புகுந்து சென்று, சென்னையின் சாலைகளைத் தன்னால் முடிந்த அளவிற்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.
மெட்ரோ பயணம் விரைவானது. அது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதில் மெட்ரோ நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே கவனமாக இருந்தது. பயணிகளின் பாதுகாப்புக்காக 186042 51515 என்ற அவசர உதவி எண்ணை அறிமுகப்படுத்தியது.
பெண்களின் பாதுகாப்புக்காக பிற புற நகர் ரயில்களைப் போலவே மெட்ரோவும் தனி கோச் பொருத்தி இருக்கிறது. இது தவிர, மெட்ரோவில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து சர்வே ஒன்றையும் கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடத்தியது. சுமார் 12,000 பெண்கள் இந்த சர்வேயில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணத்தில் பெண்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த சர்வேயின் அடிப்படையில் மெட்ரோ அதிகாரிகள் பெண்களுக்கென்று பிரத்யேகமான அவசர உதவி எண் ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்கள்.
ஏற்கனவே உள்ள பொதுவான உதவி எண் 11 இலக்கங்களைக் கொண்டது. அதை விட எளிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். நான்கு இலக்கங்களாக இருந்தால் பெண்கள் நினைவில் வைத்துக் கொள்வதும், அழைப்பதும் சுலபம் என்று, பி.எஸ்.என்.எல்.லிடம் (BSNL) நான்கு இலக்க எண் ஒன்றைக் கேட்டிருக்கிறார்கள்.
அந்த எண் வந்ததும், அதை மெட்ரோ நிலையங்கள், ரயில்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.