Amazing Tamilnadu – Tamil News Updates

மூடப்படும் சென்னை ‘உதயம்’ திரையரங்கம்… ஈரம் கசிய வைக்கும் நினைவுகள்..!

திரையரங்கங்கள் ஒவ்வொன்றிலும் அவற்றில் படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு அது குறித்த நினைவுகள் பல நூறு இருக்கும். தமிழ்நாட்டின் ஏதோ ஊரின் மூலையிலிருந்து சினிமா கனவுடன் சென்னையில் வந்து இறங்கியவர்களுக்கு அவர்களது திறமை, விடா முயற்சி, போராட்டக்குணத்துக்கு ஏற்ப தமிழ் சினிமா அவர்களை அரவணைத்து, அவர்களை உச்சத்தில் கொண்டு நிறுத்தி, ரசிகனை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. அத்தகைய உயரம் தொட்ட உச்ச நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் ஏராளமானோரின் கனவுகளை சாத்தியமாக்கிய திரைப்படங்களை வாழவைத்தது சினிமா தியேட்டர்கள்தான்.

அந்த வகையில், சென்னை தொடங்கி குமரி மாவட்டம் வரையிலான திரையரங்குகள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவை வாழவைத்தவை தான். ஆனாலும், கால மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு துறையும் இன்னொரு பரிமாணத்தை அடையும்போது சில இழப்புகளும் மாற்றங்களும் தவிர்க்க முடியாதவை தான். இதில் திரையரங்குகள் மட்டும் தப்பித்துவிடுமா என்ன?

அப்படித்தான் சமீபத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான கோவை, வெரைட்டி ஹால் சாலையில் இருந்த நூற்றாண்டு பெருமை கொண்ட டிலைட் தியேட்டர் இடிக்கப்படுவதாக செய்தி வெளியானது. இதோ அடுத்ததாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த ‘உதயம்’ திரையரங்கும் மூடப்படுகிறது. இந்த வளாகத்தில் உதயம் மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரையரங்குகள் இயங்கி வந்தன. 1983 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கு 41 வருடங்களாக செயல்பட்டு வந்த நிலையில் இப்போது மூடப்படுகிறது. கட்டுமான நிறுவனம் ஒன்று அந்த இடத்தை வாங்கியுள்ளது. அங்கு குடியிருப்பு வளாகம் வரலாம் என்று கூறப்படுகிறது.

காற்று வாங்கும் திரையரங்குகள்… காரணம் என்ன?

விசேஷ நாட்கள் தவிர்த்து விஜய், அஜித் படமென்றால் கூட வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மட்டுமே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு வருகிறது. மற்ற வார நாட்களில் காற்று வாங்குகின்றன. படம் குறித்த மிக பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தால், அதிகபட்சம் ஒரு வாரம் தாங்குகிறது. அதனால் தான், ஒரு காலத்தில் நூறாவது நாளில் வெற்றிவிழா கொண்டாடிய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் இப்போது படம் வெளியான மூன்றாவது நாளிலேயே வெற்றி விழாவைக் கொண்டாடி விடுகிறார்கள்.

அண்மையில் இடிக்கப்பட்ட கோவை டிலைட் தியேட்டர்

போதாதற்கு படங்களை மொபைலிலேயே பார்க்கும் அளவுக்கு வந்துவிட்ட ஓடிடி தளங்கள் வேறு. படம் வெளியான ஒரே வாரத்திலேயே வீட்டில் ஹாயாக அமர்ந்துகொண்டு அதனை பார்க்கும் முடியும் என்பதால், டிக்கெட் கட்டணம், போக்குவரத்துச் செலவு, தியேட்டரில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகளின் அதீத விலை போன்றவையெல்லாம் சேர்ந்துதான் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறைந்து போனதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இத்தகைய வருவாய் இல்லாத சூழலில், அதிகரிக்கும் பராமரிப்பு செலவு, பணியாட்களுக்கான ஊதியம், வரிகள், மின்சார கட்டணம் எனப் பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல், பல திரையரங்கங்கள், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மென்ட்களாகவும் மாறுகின்றன. இதில், தற்போது உதயம் திரையரங்கமும் இணைந்துள்ளது.

கால மாற்றத்தின் வலியை சொன்ன ‘வெயில்’

மேடை நாடகங்களை எப்படி சினிமா முழுங்கியதோ, அப்படியே சினிமாவை சின்னத்திரையும், டிவிடி-களும் 90 களின் இறுதியில் விழுங்கத் தொடங்கின. இதனால், அப்போதிருந்தே தமிழ்நாட்டின் பல ஊர்களின் அடையாளமாக திகழ்ந்த பல புகழ்வாய்ந்த திரையரங்கங்கள் இழுத்து மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறத்தொடங்கின. இந்த மாற்றத்தின் வலியை, சினிமா மீது வெறி கொண்ட ரசிகனின் வாழ்க்கையின் ஊடாக 2006 ல் வெளியான தனது ‘வெயில்’ படத்தில் மிக அற்புதமாக காண்பித்து இருப்பார் இயக்குநர் வசந்த பாலன்.

சினிமா பார்க்க சென்றதற்காக, அப்பா தன்னை அம்மணமாக விட்டு அடித்த அவமானம் தாங்காமல் காசை திருடிக்கொண்டு ஊரைவிட்டு ஓடி, சினிமா தியேட்டர் ஆபரேட்டர் பணியில் சேர்ந்து, அந்த வேலையை மிக ரசித்து செய்யும் கேரக்டரில் வருவார் நடிகர் பசுபதி. தியேட்டர் மூடப்பட்டதால் வேலை இழந்து, இடையில் காதலியையும் இழந்து, வறுமை நிலையில், சொந்த ஊர் திரும்புவார். வீட்டுக்குச் சென்றவரை அவரது தந்தை உள்ளே விட மறுக்க, கடைவீதிக்கு வந்து டீக்கடை அருகே நிற்பார். அப்போது அவரது தம்பி கேரக்டரில் வரும் நடிகர் பரத்தை யாரோ “டேய் கதிரே…” என்று பெயர் சொல்லி அழைக்க, திரும்பி பார்க்கும் பசுபதிக்கு அது தனது தம்பி கதிராக இருக்கலாமோ என்ற சந்தேகம் வரும்.

மெல்ல அவரை நெருங்கி, அவரது முகத்தைப் பார்க்கும் பசுபதி, அது தனது தம்பிதான் என்பதை ஓரளவு யூகித்து விடுவார். இருப்பினும், உறுதி செய்துகொள்வதற்காக ” கறிக்கடைக்காரர் பையனா..?” எனக் கேட்பார். பரத்தும் “ஆமாம்” என்று கூறியபடியே, ” எதுக்கு கேட்கிறீங்கண்ணே… ஏதாவது பஸ்சுக்கு காசு வேணுமா..?” எனக் கேட்க, கிட்டத்தட்ட அழும் நிலைக்குச் சென்றுவிடும் பசுபதி, ” அண்ணன்டா!” என்பார். உடனே பரத் சுதாரித்து, ” முருகேசண்ணே…?!” எனக் கேட்க, பசுபதி “ஆமாம்” எனத் தலையாட்ட, இருவரும் கட்டிப்பிடித்து உடைந்து அழும் அந்த தருணம், படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் நிச்சயம் கண்ணீரை வரவழைத்துவிடும். அத்தகையதொரு நெகிழ்ச்சியான காட்சி அது.

சொல்லி மாளாத தியேட்டர் கதைகள்

60,70, 80 கள் தொடங்கி 90 கள் வரையிலான பால்ய, பதின் பருவத்தைக் கொண்டவர்களுக்கு திரையரங்குகள் தந்த கிளர்ச்சியும் பரவசமும் சொல்லில் அடங்காதவை. டென்ட் கொட்டாயில் மணல் குவித்து படம் பார்த்த அனுபவம் முதல், தனக்குப் பிடித்தமான நடிகரின் பட ரிலீஸ் நாளில் முதல் காட்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று பள்ளி, கல்லூரிக்கு ‘கட்’ அடித்துவிட்டு, டிக்கெட்டுக்கான பணத்தை தேத்த மேற்கொண்ட விதவிதமான முயற்சிகள், பொங்கல், தீபாவளி நாளில் கடுமையான சாகசங்களை நிகழ்த்தி, இலேசான மஞ்சள் ஒளியில் மிளிரும் குண்டு பல்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருக்கும் டிக்கெட் கவுன்ட்டரை நெருங்கும் வரை ‘டிக்கெட் கிடைக்குமா… கிடைக்காதா…’ என திக் திக் மனசுடன் வரிசையில் முன்னேறி, காசைக் கொடுத்து வெற்றிகரமாக டிக்கெட்டை வாங்கும் அந்த தருணம் தந்த மகிழ்ச்சி வரை சொல்ல ஏக்கமான ஏராள கதைகள் உண்டு.

மூடப்பட்டு கிடக்கும் நெல்லை சென்ட்ரல் தியேட்டர்

இப்பவும் பிழைப்புக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர் திரும்பும்போது முன்பிருந்த திரையரங்குகள் மூடப்பட்டு கிடப்பதை ஏக்கத்துடன் பார்த்து, அந்த தியேட்டரில் பார்த்த படங்கள், அது சார்ந்த சுவாரஸ்யமான நினைவுகளை நிச்சயம் அசைபோட்டு பார்ப்பார்கள். இப்பவும் பல ஊர்களில் பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு மால்களாக மாறப்போவதாக செய்திகள் வெளியாகும்போது, அந்த தியேட்டர்களில் படம் பார்த்த அனுபவங்களை, அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதை அவ்வப்போது பார்க்கலாம்.

கண்ணீர் வடிக்கும் வைரமுத்து

இதோ இப்போது உதயம் திரையரங்கம் குறித்த நினைவுகளையும் ஏக்கத்துடன் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தனது X வலைதள பக்கத்தில்,

ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது

முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன

மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது

இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்

நன்றி உதயம்

என எழுதியுள்ளார்.

“போய் வா என் பிரியமே”

அதேபோன்று, பொன்னியின் செல்வன் திரைப்பட பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இது குறித்த தனது முகநூல் பதிவில், “உதயம் தியேட்டர் மேல் தனிப் பிரியம் உண்டு. உதயம் தியேட்டர் வாசலில்தான் என் சென்னை வாழ்வு உதயமானது. நான்கு பேண்ட் சர்ட்டுகளுடனும் ஐநூறு ரூபாய் காசோடும் கோவையில் இருந்து உதயம் தியேட்டர் வாசலில்தான் வந்திறங்கினேன். தியேட்டர் பேரைப் படித்ததும் நல்ல சகுணம் என நினைத்துக்கொண்டேன். அது ஒரு குட்டி தன்னம்பிக்கையை ஆறுதலைத் தந்தது. அதனால் இந்த தியேட்டர் மேல் தனி பிரியம். தியேட்டரை இடிக்கப் போகிறார்களாம். ஏதாவது வணிக வளாகம் வருமாய் இருக்கும். போய் வா என் பிரியமே…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சிலர் வாழ்க்கையின் பேரடைஸ்

rethnagiri K@RethnagiriK என்ற பதிவர் தனது X தளத்தில்,

பேச்சிலர் வாழ்க்கையின்
பேரடைஸ் உதயம் தியேட்டர்.

பல பின்னிரவுகளின்
கலைக்கூடம்.

நகரம் வளரத் தொடங்கிய
காலத்தில் நாகரிகம்
காட்டி நின்றது.

நகரம் நாகரிகப்பட்டு
நிற்கையில் பழமை தாங்கி
பட்ஜெட்டுக்குள்
படங்கள் காட்டியது.

உதயம் மூடப்படுவதில்
இதயம் கனக்கிறது.

எனப் பதிவிட்டுள்ளார்.

எந்த ஒரு சினிமா ரசிகனுக்கும் சினிமா தியேட்டர் மூடப்படுவது என்பது நிச்சயம் இதயத்தை கனக்க வைக்கிற ஒன்றுதான். ஆனால், என்ன செய்ய… கனத்த மனதுடன் இதையும் கடந்து போகத்தான் செய்ய வேண்டும். ஆனால் ஒன்று… சினிமாவை பார்க்கும், எடுக்கும் வடிவங்கள் மாறலாம்… ஆனால், சினிமா மனிதன் இருக்கும் வரனவன் கூடவே பயணித்துக்கொண்டே தான் இருக்கும். ஏனெனில் மனிதனுக்கு கதை சொல்லாமலும் கதை கேட்கமாலும் இருக்கவே முடியாது!

Exit mobile version