‘தமிழர்கள் மீது திருட்டுப் பழி சுமத்தலாமா..?’ – பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரமும் முதலமைச்சர் ஸ்டாலினின் கேள்வியும்!
தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்கெனவே முடிவடைந்துவிட்ட நிலையில், நேற்று மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்தாம் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் இரண்டுகட்டத் தேர்தல் வருகிற 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தென்னிந்தியர்களுக்கு எதிரான உத்தரப்பிரதேச பேச்சு
முன்னதாக ஐந்தாம் கட்டத்தேர்தல் பிரசாரத்தின்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “தென்னிந்தியாவில் இருப்பவர்கள் உத்தரப்பிரதேச மக்களை இழிவாகப் பேசுகின்றனர். இதை நாம் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது” எனக் கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பிளவுவாத அரசியலை மோடி கையிலெடுத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஒடிசா பிரசாரத்தில் தமிழகத்தின் மீது அவதூறு
இந்த நிலையில்தான், ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டினார். ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நெருக்கமான உதவியாளராகவும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு மிக்க நபராகவும் கலக்கி வரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் தமிழருமான வி.கார்த்திகேய பாண்டியனை மனதில் வைத்தே மோடி இவ்வாறு பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கார்த்திகேய பாண்டியன் மீதான காழ்ப்புணர்ச்சியில் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்பதுபோல குற்றம் சாட்டலாமா எனப் பிரதமர் ,மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் கேள்வி
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் – மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல!
முன்னதாக, உத்தரப்பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். அதற்கு எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்திருந்தேன்.
தமிழர்கள் திருடர்களா?
தற்போது, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?
இரட்டை வேடம் ஏன்?
தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறி உள்ளார்.