Amazing Tamilnadu – Tamil News Updates

‘முரசொலி மாறன்’: கலைஞரின் மனசாட்சி என அழைக்கப்பட்டது ஏன்?

ழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், திராவிட இயக்க வரலாற்றாசிரியர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ஒன்றிய அமைச்சர், இவை எல்லாவற்றையும் விட … டெல்லிக்கான திமுகவின் அறிவுஜீவி முகமாகவும், அந்த இயக்கத்தின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் மனசாட்சியாகவும் அறியப்பட்ட முரசொலி மாறனின் நினைவு தினம் இன்று…

இதனையொட்டி அவர் குறித்த சில தகவல்கள் இங்கே…

முரசொலி மாறன் பிறந்த ஊர் திருவாரூரில் உள்ள திருக்குவளை. சண்முகசுந்தரம் – சண்முகசுந்தரி தம்பதியரின் முதல் மகனாக 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ல் பிறந்தார். தந்தை சண்முகசுந்தரம் திருவாரூரில் குடி கொண்டு இருக்கும் இறைவன் சிவபெருமாளின் திருப்பெயரான தியாகராஜ பெருமாளின் மேல் உள்ள பக்தியால் தியாகராஜ என்ற பெயருடன் தனது பெயரில் உள்ள சுந்தரம் என்பதை சேர்த்து மகனுக்கு தியாகராஜசுந்தரம் என்று பெயரிட்டார். இவர் தாயாரான சண்முகசுந்தரி திமுக தலைவராக இருந்த கலைஞர் மு. கருணாநிதியின் சகோதரி என்பதால், கலைஞர் இவருக்கு தாய்மாமன் ஆவார். மகன்களான சன் டிவி கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் மகள் அன்புக்கரசி என மாறனுக்கு 3 பிள்ளைகள்.

கலைஞர் தனது ஆரம்பகால அரசியலில் கையெழுத்து பத்திரிகையை நடத்தி வந்த போது அவரிடம் உள்ள அனைத்து விதமான புத்தகங்களையும் குறிப்பாக அரசியல் சார்ந்த புத்தகங்களை மிகவும் கவனத்துடன் படித்து தனது மாமாவான கருணாநிதியிடமே பல சுவையான ஆலோசனை விவாதங்கள் செய்துள்ளார். பின்பு கலைஞர் ‘ ‘முரசொலி’ என்ற தனது சொந்த பத்திரிக்கை நடத்தி வந்த போது அதில் மேலாளாராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

‘முரசொலி மாறன்’ ஆன ‘தியாகராஜசுந்தரம்’

மாறனின் நிஜப்பெயரான தியாகராஜசுந்தரம் என்பதை ‘நெடுமாறன்’ என்று மாற்றியவர் கலைஞர். ஆனால், நெடுமாறன் என்ற பெயரில் ஏற்கெனவே இரண்டு பேர் இருந்ததால், ‘முரசொலி’ பத்திரிகையின் பெயரை தனக்கு முன்னால், சேர்த்துக் கொண்டு ‘முரசொலி மாறன்’ ஆனார்.

அண்ணா இருந்த போதே அரசியலுக்கு வந்தவர் முரசொலி மாறன். 1967-ல் தென் சென்னை தொகுதியில் வென்றிருந்த அண்ணா, தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட முரசொலி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இதனையெல்லாம் தாண்டி இந்தியாவின் நவீன பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்த சிற்பிகளில் முரசொலி மாறனும் ஒருவர்.

மத்திய அரசில் திமுக-வை பங்கேற்க வைத்தவர்

1989 ல் முன்னாள் பிரதமரான வி.பி. சிங் தலைமையிலான ‘தேசிய முன்னணி’ என்ற மூன்றாவது அணி டெல்லி அரசியலில் உருவானபோது, கால மாற்றத்துக்கு ஏற்ப திமுக-வையும் அதில் இணைய செய்ததில் முரசொலி மாறன் மேற்கொண்ட முன்னெடுப்புகளும் முயற்சிகளும்தான், அப்போதும் அதற்கு பிந்தைய காலகட்டங்களிலும் திமுக தொடர்ந்து ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற வழிவகுத்தது.

தேசிய முன்னணி தலைவர்கள் உடன் கருணாநிதி

வாஜ்பாய் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக முரசொலி மாறன் இருந்த காலகட்டங்கள் மிகவும் சிக்கலானது. உலகமயமாக்கலின் காரணமாக மிகக் கடினமான சூழல்களை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்தது. கத்தாரின் ‘தோஹா’வில் நடந்த உலக வர்த்தக கூட்டமைப்பின் ( WTO)மாநாட்டில் முரசொலி மாறனின் உரை மிகவும் முக்கியமானது. வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் வளர்ந்த நாடுகளால் எடுக்கப்பட்ட முயற்சிகளை மாறன் கண்டித்துப் பேசினார். ‘முரசொலி மாறன்’ என்ற ஒற்றை மனிதரின் முயற்சியால் வளரும் நாடுகளின் குரல் வர்த்தக அமைப்பில் செவிமடுக்கப்பட்டதாக Business Week, The Wall Street Journa போன்ற வெளிநாட்டு பத்திரிக்கைகள் இவரை பாராட்டி எழுதின.

அதேபோல், இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வந்ததிலும் முரசொலி மாறனின் பங்கு மகத்தானது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக மாறன் இருந்த போது 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதற்கான கொள்கை, மத்திய அரசால் வகுக்கப்பட்டது. “வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் முக்கிய நோக்கம்” எனக்கூறி, சீனாவில் வெற்றிகரமாக அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து அறிந்து கொள்ள சீனாவுக்கு சென்று வந்தார்.

கலைஞரின் மனசாட்சி என அழைக்கப்பட்டது ஏன்?

அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த திராவிட இயக்க ஆய்வாளராகவும் அறியப்பட்டவர் முரசொலி மாறன். மாநில சுயாட்சி குறித்த இவரது நூல் இன்றளவும் திராவிட இயக்கத்தின் சிறந்த ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளுக்காக முரசொலி மாறன் எழுப்பிய குரல், தமிழ்நாட்டுக்கானதாக மட்டுமே அல்லாது பிற மாநிலங்களுக்குமானதாகவும் இருந்தது.

“திமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி… இல்லாதபோதிலும் சரி… கட்சியினரையும் நிர்வாகிகளையும் விரட்டி வேலை வாங்குவதில் முரசொலி மாறன் கெட்டி. அதனாலேயே கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பி-க்கள், அமைச்சர்கள் அவர் கண்ணில்படாமல் சமயங்களில் ஓட்டமெடுப்பார்கள்…” எனக் கட்சியின் அப்போதைய மூத்த நிர்வாகிகள் சொல்வதுண்டு. பொதுக்குழு கூட்டங்கள் போன்றவை நடைபெறும்போது, கட்சியினரின் தவறுகளை மட்டுமல்ல… கட்சியின் கொள்கை, செயல்பாடுகளையும், ஆட்சியில் இருந்தால் நிர்வாக தவறுகளையும் கூட வெளிப்படையாக பேசி, கண்டிப்பார். அதனாலேயே முரசொலி மாறனை கலைஞர் தனது ‘மனசாட்சி’ என்று விளித்தார்.

இவ்வாறாக திமுகவின் சித்தாந்தத்தை வடிவமைப்பதிலும், சமூக நீதியை வலியுறுத்துவதிலும், மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பதிலும் முரசொலி மாறன் ஆற்றிய பங்கு, அவரைத் தமிழ்நாடு என்றென்றும் நினைவில் கொள்ள வைக்கும்..!

Exit mobile version