Amazing Tamilnadu – Tamil News Updates

முதலமைச்சருடன் பேச உத்தரவு… என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?

மிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை நீண்ட நாட்களாக கிடப்பில் போட்ட விவகாரத்தினால் ஏற்பட்ட குழப்பத்திற்கு முதலமைச்சருடன் பேசி தீர்வு காண வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இவ்விவகாரத்தில் ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் கிளம்பியுள்ளன.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்த தமிழக ஆளுனர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

ஒரு மசோதா ஆளுநர் மூலமாகத் திரும்ப அனுப்பப்பட்டால், அந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் பின்னர் தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். இங்கு எந்த விளக்கமும் கொடுக்காமல், தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், முதல்முறை மசோதா அனுப்பும் போதே அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்கலாமே என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டு மறுநிறைவேற்றம் செய்த பின் அனுப்பியது ஏன் எனவும், மறு நிறைவேற்றம் செய்த மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் எவ்வாறு அனுப்ப முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “மசோதாக்களை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பாததால் அவர் தரப்பில் குழப்பம் உள்ளது. சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர் ( Nominee) என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணவேண்டியுள்ளது. முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம், ஆளுநரே தீர்வு காண வேண்டும், இல்லாவிடில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்”என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு வருகிற 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ஒன்றிய அரசுக்கும் பின்னடைவு

மத்தியில் ஆளும் பாஜக-வின் செயல்திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கிலேயே ஆளுநர் இவ்வாறு தங்கள் அரசுக்கு குடைச்சல் கொடுப்பதாக ஆளும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்படும் நிலையில், முதலமைச்சரை அழைத்துப் பேச வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆளுநருக்கும் அவரை ஆட்டுவிக்கும் ஒன்றிய அரசுக்குமான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இவ்விவகாரத்தில் ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் கிளம்பியுள்ளன. ஆளுநரின் செயல்பாடு என்பது அரசியல் சாசனத்துடனான ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றன. இப்படியான நிலையில் ஆளுநர் முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன..?

ஆளுநர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன..?

“இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அவர் கட்டாயம் செயல்படுத்தியே தீர வேண்டும். இல்லையெனில் உச்ச நீதிமன்றம் தலையிடும். அது ஆளுநருக்கு மட்டுமல்லாது, ஒன்றிய அரசுக்கும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். முதலமைச்சரின் கவலைகள் மற்றும் கருத்துகளைப் புரிந்து கொள்ளவும், மசோதாக்கள் தொடர்பாக அவருக்கு ஏதேனும் ஆட்சேபனைகள், கவலைகள் அதனை வெளிப்படுத்தவும், விளக்கங்கள் தேவை இருந்தால் அதனைக் கேட்கவும் இந்த சந்திப்பை ஆளுநர் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி பேசினால் அது, இரு அரசியலமைப்பு அதிகார நபர்களுக்கு இடையேயான பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும். மேலும், இவ்விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதலை வழங்காததற்கு காரணமாக தான் கருதும் சிக்கல்களுக்கு தீர்வுகள் கிடைக்கலாம்.

அத்துடன் மசோதா தொடர்பான இருவரின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான சாத்தியமான சமரசங்கள் அல்லது திருத்தங்களை ஆராய்வதற்கு ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இச்சந்திப்பு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சூழல் எழுந்தால், இருவருக்கும் பொதுவான நிலையைக் கண்டறிந்து, விரைவில் ஒப்புதல் வழங்குவதற்கான திட்டமிடலை வகுக்கவும் இச்சந்திப்பு உதவும்.

அதே சமயம் இந்த பேச்சுவார்த்தையிலும், அரசியல் சாசனத்தின்படி செயல்படுவதிலும் ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இப்பேச்சுவார்த்தை நடைபெறும், அப்படியே நடந்தாலும் பலனளிக்கும்” என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

என்ன செய்யப் போகிறார் ஆளுநர்..?

Exit mobile version