Amazing Tamilnadu – Tamil News Updates

முடிவுக்கு வந்த சுடிதார் விவகாரம்… அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு இனி குழப்பமில்லை!

ரசாணை இருந்தும், தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் சுடிதார் அணியலாமா கூடாதா என்பது குறித்து நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ஆசிரியர்கள் பேன்ட் சட்டையும், ஆசிரியைகள் சேலையும் அணிந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சேலையை விட சுடிதார் தங்களுக்கு செளகரியமாக இருப்பதாகவும், அதனால் மற்ற தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசு பள்ளிகளில் உள்ளது போன்று தாங்களும் சுடிதார் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை

இந்த நிலையில், தமிழக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் “பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடை களை அணிந்து கொள்ளலாம். ஆண் ஆசிரியர்கள் தமிழக பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை , சாதாரண பேன்ட் சட்டை எனத் தங்களுக்கு பிடித்தமானவற்றை அணியலாம்”எனக் கூறப்பட்டிருந்தது.

அரசாணை

இதனையடுத்து விருப்பப்பட்ட ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது சுடிதார் அணிந்து வரத் தொடங்கினர். ஆனால், இதனை அனுமதிக்கும் அரசாணை இருப்பதே தமிழகத்தில் உள்ள பல கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரியாத நிலை இருந்ததால், பல ஊர்களில் இது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அரசாணை இருப்பதால், சில ஆசிரியைகள் சுடிதார் அணிந்து சென்றனர். ஆனால், அவர்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் அரசாணை பற்றி அறியாமலோ அல்லது அறிந்து கொள்ள முயலாமோ திட்டி, கண்டித்தனர். மேலும் இனி இதுபோன்று சேலை அணிந்து வரக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியதாகவும் ஆசிரியைகள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

குழப்பமும் குமுறல்களும்

“ஆண் ஆசிரியர்கள் முன்பெல்லாம் வேட்டிதான் அணிந்து வந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் பேன்ட்-ஷர்ட்டுக்கு மாறிவிடவில்லையா? எங்களை மட்டும் இன்னமும் சேலை கட்டச் சொல்லி நிர்பந்திப்பது என்ன நியாயம்? மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்குச் சீருடையாக முன்பு பாவாடை- தாவணி இருந்தது. ஆனால், கண்ணியமான உடை என்பதாலேயே இப்போது சுடிதாரைச் சீருடையாக்கி இருக்கிறது அரசு. மாணவிகளுக்குக் கண்ணியமாக இருக்கும் ஆடை, ஆசிரியைகளுக்குப் பொருந்தாதா?

கரும்பலகையில் எழுதும்போது கவனம் முழுவதும் முதுகு தெரிகிறதா… இடுப்புப் பகுதி வெளியே தெரியாமல் இருக்கிறதா என்பதிலேயே இருந்தால், பாடம் எப்படி ஒழுங்காக எடுக்க முடியும்? ஒரு சாக்பீஸ் கீழே விழுந்தால்கூட உடனே குனிந்து எடுக்கத் தயக்கமாக இருக்கும். இரு சக்கர வாகனத்தை ஓட்ட, பேருந்து பிடிக்க என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான உடை சுடிதார்தான். கல்லூரிகளில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பணிக்கு வருகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் தலைமை ஆசிரியர்களும் அதிகாரிகளும் தடை விதிக்க வேண்டும்? அரசாணையைச் சுட்டிக்காட்டினால், ‘நீங்கள் குறிப்பிடும் உத்தரவு பள்ளிகளுக்குப் பொருந்தாது எனச் சொல்கிறார்கள்” என ஆசிரியைகள் தரப்பில் குமுறல்கள் எழுந்தன.

தெளிவுப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த நிலையில் தான் இந்த குழப்பங்களுக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “ ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமூகம் சிறந்து விளங்க முடியாது. இப்படி முக்கிய பங்காற்றி வரும் ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. அது நம் பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி, விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்” எனக் கூறினார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சுடிதார் அணிந்து வர விரும்பும் அரசுப் பள்ளி ஆசிரியைகள் மத்தியில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, தலைமை ஆசிரியர்களும் கல்வித் துறை அதிகாரிகளும் அரசாணை குறித்த தெளிவைப் பெறுவார்கள் என நம்பலாம்!

Exit mobile version