மிக்ஜாம் புயலால் புரட்டிப் போடப்பட்ட சென்னை மாநகரத்தின் பல பகுதிகள் நேற்றிலிருந்தே இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிவிட்ட நிலையில், இன்று நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வற்றி மக்களின் வழக்கமான நடமாட்டம் தொடங்கிவிட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பல அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சியின் களப்பணியாளர்கள், மீட்புக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இரவு பகல் பாராமல் சுற்றிச் சுழன்றதால் 2015 ஆம் ஆண்டின் கசப்பான நிகழ்வுகளை மீண்டும் சந்திக்கும் அவல நிலையிலிருந்து சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டை மிரட்டிய ‘மிக்ஜாம்’ புயல் ஒருவழியாக நேற்று அதிகாலை தமிழ்நாட்டைக் கடந்து, ஆந்திரா மாநிலம் நோக்கி சென்ற நிலையில், கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்தது. இதனை சமாளிக்க தமிழ்நாடு அரசும், பேரிடர் மேலாண்மைத் துறையும் மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறை எனப் பல துறையினரும் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கினர். சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் வேக வேகமாக மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு
வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையிலான குழு பொதுமக்களை பாதுகாப்புடன் முகாம்களில் தங்க வைத்து தேவையான நிவாரணம் வழங்குதல், சென்னையில் மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து களத்தில் பணி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சென்னையில் மட்டும் 162 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2477 பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்குவதற்காக 20 சமையல் கூடங்கள் செயல்பட்டு வருகின்றனர்.அதேபோல், மழைநீர் அதிகம் தேங்கியுள்ள மடிப்பாக்கம், பெரியார் நகர், ராம் நகர், பள்ளிக்கரனை போன்ற பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ள நீர் வடியாமல் தேங்கியுள்ள பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் உணவு பொருட்களை வழங்கியும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியிலும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள ஆய்வில் முதலமைச்சர்
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சமுதாய நலக்கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்து வேண்டிய வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, சிறுகுறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி போன்றவர்களும் கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு, உணவு, மருத்துவ முகாம்களுக்கான உதவிகளை மேற்கொண்டனர். இதனால், வெள்ள நீர் பாதிப்பில் முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களுக்கான உதவிகள் துரித கதியில் கிடைத்தன. கடந்த 2015 மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களே அதிகம் உதவினர். ஆனால் இந்த முறை 2015 ஆண்டைப் போல அல்லாமல், அரசே அனைத்தையும் பார்த்துக் கொண்டது.
புகார்களுக்கு துரித நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் புகார்களுக்கு உடனுக்குடன் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டன. மழைக்கு முன்னதாகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தல் மற்றும் தானே பல இடங்களுக்குச் சென்று மேற்கொண்ட ஆய்வுகள் காரணமாக மழை தொடங்கும் முன்னரே மழைநீர் வடிகால்கள் நல்ல முறையில் பணி செய்யும் அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ள நீர் இறுதியாக கடலில் வடியக்கூடிய அடையாறு மற்றும் கூவம் நதிகளின் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அலைகளின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால், இந்த நதிகளில் வெள்ள நீர் மிக மெல்லமாகவே வடிந்தது. இருந்தாலும், அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ள நிவாரணப் பணிகளால் இச்சூழ்நிலையிலிருந்து பெருமழையின் தாக்கம் குறைக்கப்பட்டு, வெள்ளநீரும் விரைவாக வடியத் தொடங்கியது.
இது தொடர்பாக முதலமைச்சர் அளித்த பேட்டியில், “ ‘ரூ.4 ,000 கோடியில் பணிகள் செய்தும், சென்னை மிதக்கிறது’ என எடப்பாடி பழனிசாமி ஒரு பெரிய குற்றமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, ரூ.4000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்ற காரணத்தால்தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத 47 வருடமாக பார்க்காத மழையை இன்றைக்கு பார்த்திருக்கின்றோம். அதேபோல், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் சென்னை தப்பி இருக்கிறது என்று சொன்னால், ரூ.4,000 கோடியைத் திட்டமிட்டு செலவு செய்து, அந்தப் பணிகளை எல்லாம் நிறைவேற்றிய காரணத்தினால் தான். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு காலத்தில் இதை செய்து முடித்திருக்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.
இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை
இந்த நிலையில், சென்னையில் இன்று 300 நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்களை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடமாடும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் 300 வாகனங்களின் மூலம் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரிகளில் திறந்துவிடப்படும் உபரி நீரால் கூவம், அடையாறு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வருவதால் உபரி நீரும் தொடர்ந்து திறக்கப்படுகிறது” என அவர் மேலும் கூறினார்.