மின்சார வாகனங்களின் தலைநகரம் தமிழ்நாடு!
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதுவுமில்லாமல் பெட்ரோல் டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இருக்கிறது. எனவே மின்வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி உலகம் முன்னேறி வருகிறது. பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் மற்றும் பேருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் கூட மின் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
உலகம் போகும் இந்த வேகத்திற்கு ஏற்ப மின் வாகனங்களின் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, உற்பத்தியிலும் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் இருசக்கர மின்சார வாகனங்களில் 50%க்கும் அதிகமானவை தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சாதனை ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே, இந்தியாவில் உற்பத்தியாகும் நான்கு சக்கர மின் வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன எனும் புதிய சாதனையும் தமிழ்நாடு படைத்துள்ளது.
ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘வாகன் டாஷ்போர்ட்’ அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில், கிட்டத்தட்ட 10 லட்சத்து 44 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 802 மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என அந்தத் தரவுகள் சொல்கின்றன. இதன்மூலம் மின்சார வாகனங்களின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகத் தமிழ்நாடு மாறி உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களுக்கு உருவாக்கித் தரும் கட்டமைப்பு வசதிகள், மானியங்கள், தொழில் செய்யப் பாதுகாப்பான சூழல் ஆகியவைதான்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய ஐந்து நகரங்களை EV (மின்சார வாகன மையம்) மையங்களாக உருவாக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியது.
மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி ஈர்த்தது. இந்த வளர்ச்சி தொடருமேயானால் வரும் 2025-க்குள் மின் வாகனத் தயாரிப்பில் தமிழ்நாட்டில் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கும் என்று ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது.
மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின் வாகனங்களில் 30% தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கும்.
மொத்தத்தில் மின்சார வாகனங்களின் தெற்காசியத் தலைநகரமாக மாறி வருகிறது.