Amazing Tamilnadu – Tamil News Updates

மாற்றமடையும் சென்னை: 3,877 சாலைகள் சீரமைப்பு… தூர் வாரப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள்!

மிழ்நாட்டின் நலன் மற்றும் அதன் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஒரு முன்மாதிரியான தரத்தை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன் ஒரு பகுதியாக பருவ மழை தொடங்குவதற்கு முன்னரே, சென்னை மாநகராட்சி 3,877 சாலைகளை சீரமைத்துள்ளதோடு, நகரின் முக்கியமான கழிவு நீர் செல்லும் கால்வாய்களையும் தூர் வாரியிருப்பது சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

களமிறங்கிய ஸ்டாலின்

சென்னை நகரில் மழை நீர் வடிந்தோடிச் செல்வதற்கு ஏற்ற வகையில், கழிவு நீர்க் கால்வாய்களை உரிய முறையில் தூர்வாருவதிலும், சாலைகளை மேம்படுத்தப்படுத்துவதிலும் முந்தைய அதிமுக ஆட்சியில் கவனம் செலுத்தப்படாமல் போனது. இதனால், 2021 பருவ மழையின்போது சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே நேரடியாக களத்தில் இறங்கி சீரமைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து பல மணி நேரம் அவர் பல இடங்களுக்கு நேரடியாக சென்று, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ததோடு, சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதை பார்த்து மக்களுடன் ஊடகங்களும் பாராட்டின.

மேலும், எங்கெங்கு மழை நீர் தேங்குகின்றனவோ அந்தப் பகுதிகளிலெல்லாம் சாலைகள் சீரமைப்பு மற்றும் தூர் வாருதல் பணிகள் துரிதமாக முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மாநில அரசு நிர்வாகமும் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் கைகோத்து களமிறங்கியதன் பயனாக கடந்த ஆண்டு பருவ மழையின்போதே நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்னதாக மீதமிருக்கும் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும், பணிகளை நானே அவ்வப்போது ஆய்வு செய்வேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின், அதிகாரிகளை எச்சரித்திருந்தார். அதன்படி அவர் அவ்வப்போது ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

சீரமைக்கப்பட்ட சாலைகள்… தூர்வாரப்பட்ட கால்வாய்கள்

இதன் பலனாக தற்போது பருவமழைக்கு முன்னதாகவே சென்னை மாநகராட்சி, 3,877 சாலைகளை சீரமைத்துள்ளதோடு, நகரின் முக்கியமான கழிவு நீர் செல்லும் கால்வாய்களையும் தூர் வாரி முடித்துள்ளது. 33 கால்வாய்களில் நீர்வழிகளை அடைக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை ரோபோடிக் அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மாம்பலம் கால்வாயின் மதகுகளுக்கு அருகே, 11 பாதிக்கப்படக்கூடிய இடங்கள் ரோபோடிக் இயந்திரங்கள் மூலம் அடிக்கடி சுத்தம் செய்வதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. சாலைகளை சீரமைக்கும் பணியை விரைவுபடுத்தும் வகையில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பொறியாளர்களுடன் ஒருங்கிணைந்து, மடிப்பாக்கம் மற்றும் ராம் நகரில் இரவு நேரங்களில் கூட ஆய்வு மேற்கொண்டார். மடிப்பாக்கம் பள்ளி அருகே சாலைப் பணிகள் மற்றும் ஆழ்துளைச் சாக்கடை சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமையன்று சரிபார்க்கப்பட்டன.

” 2022-23-ம் ஆண்டுக்காக திட்டமிடப்பட்டு, இன்னமும் சீரமைப்பு பணிகள் செய்து முடிக்கப்படாமல் இருக்கும் சாலைகள் மற்றும் 2023-24 -ம் ஆண்டிற்காக திட்டமிடப்பட்ட தற்போதைய சாலைகளுக்கான பணிகள் இந்த ஆண்டில் எடுக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதம் முதல், 1,806 கி.மீ., நீளம் கொண்ட 11,248 சாலைகள் ரூ.1,030 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, இதுவரை 3,877 சாலைகள், குறிப்பாக உட்புறச் சாலைகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன” என சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, 387 கிமீ நீளத்திற்கான 461 பேருந்து வழித்தடச் சாலைகளையும், 5,270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளையும் பராமரிக்கிறது. 2021-22 முதல், மழைநீர் வடிகால்களை வழங்குதல் மற்றும் பிற சேவைத் துறை பணிகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், ரூ. 215 கோடி மதிப்பீட்டில் 313 கி.மீ., நீளத்திற்கு 1,656 சாலைகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மடிப்பாக்கத்தில் 184, 187 ஆகிய டிவிஷன்களில் 287 சாலைகள் தோண்டப்பட்டு, 118 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் உட்பட 126 சாலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 5,658 கி.மீ., நீளம் கொண்ட 35,111 சாலைகளில், கடந்த 6 மாதங்களில் 2,955 தெருக்களில், முக்கியமாக CMWSSB மற்றும்Tangedco உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்ட புறப் பகுதிகளில் சாலை வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட வாழ்க்கைத் தரம்

2,955 சாலைகளில், 1,967 சாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன, 505 சாலைகள் தற்காலிகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த 505 சாலைகளில் 175 சாலைகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன. 115 சாலைகளில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் வாரத்தில் 215 சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மழைக்காலங்களில் மக்கள் சிரமப்படுவதைத் தடுக்க 483 சாலைகளில் பணியை ஒத்திவைக்குமாறு அங்கு கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதில் முக்கியமாக குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை ஆழ்துளை சாக்கடை மற்றும் நீர் வழங்கல் வசதிகள் புறநகர்ப் பகுதிகளில் இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இங்கும் கூட சாலைகளை சீரமைப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் கடந்த திங்கட்கிழமையன்று சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ராதாகிருஷ்ணன். குறிப்பாக கிருஷ்ணதாஸ் மெயின் ரோடு, திருவள்ளுவர் சாலை, ரங்கசாயி தெரு, சோமசுந்தரம் நகர், ஜவஹர் நகர் மற்றும் பெரியார் நகர் தெருக்களில் அவருடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இங்கு சமீபத்தில்தான் சாலைகள் சீரமைக்கப்பட்டன. மேலும் திரு.வி.க பகுதியிலும் அவர் முடிக்கப்பட்ட சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே சென்னையில் 3,877 சாலைகள் சீரமைக்கப்பட்டது அரசு நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். முதலமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் சென்னை மாநகராட்சி இந்த மகத்தான பணியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதன்மூலம் இனி சென்னைவாசிகளுக்கு மழைக்காலத்திலும் சுமூகமான பயணம் சாத்தியமாகியிருப்பது மட்டுமல்லாமல், மழை நீர் தேக்கத்தால் அவதிப்படுவதிலிருந்தும் விடுதலை கிடைத்திருப்பதன் மூலம், நகரத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

அரசின் அர்ப்பணிப்பும் அக்கறையும்

மேலும், இத்தனை வேகமாக இந்தச் சாலைகள் சீரமைக்கப்பட்டது, குறிப்பாக உள்பகுதிகளில் உள்ள 3,877 சாலைகளின் பணியை ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் செய்து முடித்ததன் மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசுக்கு உள்ள அர்ப்பணிப்பு உணர்வும், மக்கள் நலன் மீதான அக்கறையும் வெளிப்படுகிறது.

இந்த மகத்தான பணிகள் மூலம், சென்னை குடியிருப்பாளர்களுக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்திருப்பது மட்டுமல்லாமல், நகரத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இந்தச் சாலைகள் சீரமைக்கப்பட்ட வேகத்தைப் பார்க்கும்போது, இந்தத் திட்டத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு என்ன என்பதும் வெளிப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த 2021-22 முதலே மழைநீர் வடிகால் மற்றும் இதர சேவைத் துறைப் பணிகளுக்கான கணிசமாக நிதி ஒதுக்கி, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சாலை மறுசீரமைப்புக்காக பட்ஜெட்டில் ரூ.1,030 கோடி ஒதுக்கீடு செய்ததன் மூலம் சென்னை மக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான சாலைகளை வழங்குவதில் அரசு காட்டிய அக்கறையை புரிந்துகொள்ளலாம்.

குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதை தீர்ப்பதில் அக்கறை காட்டும் அரசை பார்ப்பது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய விஷயம். வருங்காலத்திலும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ், தமிழ்நாடு மேலும் பல முன்னேற்றங்களைக் காணப்போவது நிச்சயம்!

Exit mobile version