இந்தியாவில் மாநில உரிமைகள் எப்போதெல்லாம் நசுக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அதற்கு எதிராக தெற்கிலிருந்து எழும் வலுவான குரல், திராவிட முன்னேற்றக்கழகத்துடையதாகவும் அதன் தலைவர்களுடையதாகவும்தான் இருக்கும்.
அந்த வகையில், மாநில உரிமைகள் குறித்த விஷயத்தில், பிரதமர் மோடியின் முரண்பாடான நிலையைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள், அவரை இந்திய அளவில் மோடியை எதிர்க்கும் ஒரு வலுவான தலைவராக முன்னிறுத்தி உள்ளது.
மாநில உரிமைகளுக்கு வழிகாட்டிய அண்ணாவும் கலைஞரும்
மாநில சுயாட்சிக்கான ஸ்டாலினின் இந்த போராட்டமும் உரிமைக் குரலும் ‘மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி’ என்று முழக்கமிட்டு, அந்த கொள்கை வழியில் ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி வழி வந்தவையாகும். ஆனால் அவர்கள் குரல் எழுப்பியது பெரும்பாலான மாநிலங்களில் தேசிய கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில். அதனால், அது தமிழ்நாட்டுக்குமானதாக மட்டுமே அப்போதைய ஒன்றிய அரசால் பார்க்கப்பட்டு, அதன் மீது பிரிவினைவாத முத்திரையும் குத்தப்பட்டன.
ஆனாலும் தொடர்ந்து மாநில உரிமைகளுக்காக திமுக தலைவர்கள் முன்வைத்த வலுவான வாதங்கள், மக்களிடையே மேற்கொண்ட தீவிரமான விழிப்புணர்வு பிரசாரங்கள் போன்றவற்றினால்தான் ஆட்சியில் இருந்த ஒன்றிய அரசு, ஓரளவுக்கு இறங்கி வந்து கல்வி, சமூக நலத்திட்டங்கள், நிதி பங்கீடு, நிதி ஒதுக்கீடு, வரி விதிப்புகள், சுகாதார கட்டமைப்புகள் போன்றவற்றில் சில உரிமைகளையும் ஒதுக்கீடுகளையும் தந்தன. இதன் பலனை இதர மாநிலங்களும் அனுபவித்தன.
உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசு
இப்படி போராடி பெற்ற மாநில உரிமைகளைத்தான் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறித்துக்கொண்டிருக்கின்றது. அண்ணா, கலைஞர் போன்றவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது ஒன்றிய அரசிடமிருந்து எதிர்கொண்ட அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகார போக்குகளைக் காட்டிலும், கூடுதலான அடக்கு முறைகளை எதிர்கொண்டிருக்கிறார் தற்போதைய முதலமைச்சரான மு.க. ஸ்டாலின். இதற்கு எதிர்வினையாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மிரட்டல்கள் எல்லாம் இல்லாமல் இல்லை. ஆனாலும் மாநில உரிமைகளுக்காகவும் ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு போக்குக்கு எதிராகவும் அவர் எழுப்பும் குரல்கள் அதன் பிடறியைப் பிடித்து உலுக்குகின்றன.
மாநில உரிமைகளுக்காக ஒன்றிய அரசைக் கேள்வி கேட்கும் அவரது உரைகள், இன்றைய ஆண்ட்ராய் யுகத்திற்கு ஏற்ப, தென் மாநில மொழிகளிலும், வட இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று சேருவதால், மேலும் பல மாநிலங்களும் இதனால் விழிப்படைகின்றன.
மோடியின் பாசாங்கு
இதோ இன்றும் கூட “மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கான எனது குரல்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள Speaking for India Podcast சீரிசின் மூன்றாவது அத்தியாயத்தில், “குஜராத் முதலமைச்சராக மாநில உரிமைகளைப் பேசிய மோடி, இப்போது பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக்கிறார்” எனக் குற்றம் சாட்டி உள்ளதோடு, மோடி முதலமைச்சராக இருந்த வரைக்கும் பேசியதற்கும், பிரதமர் ஆனதும் செய்வதற்கும் இருக்கும் வேறுபாட்டிற்குமான சில எடுத்துக்காட்டுகளையும் பட்டியலிட்டுள்ளார்.
கூடவே திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு உருவாக்கப்பட்ட சத்தே இல்லாத ‘நிதி ஆயோக்’அமைப்பு, பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாத மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்ப்பது, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிதி பங்கீட்டை ஒழுங்காகக் கொடுக்காமல் இருப்பது, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி குறைப்பு… என அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மோடியின் பாசாங்கை அம்பலப்படுத்தி, எதிர்கால இந்தியாவுக்கான ஒரு யுத்தத்தை மேற்கொண்டு உள்ளார் மு.க. ஸ்டாலின்.
அலட்சியப்படுத்திட முடியாத குரல்
மாநில உரிமைகளுக்காக தெற்கிலிருந்து எழும் முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த குரலும், அதில் இருக்கும் நியாயமான வாதங்களும் அலட்சியப்படுத்திட முடியாத ஒன்று என்பதை ஒன்றிய அரசும் அதன் பிரதமரும் உணர்ந்து கொள்வதே கூட்டாட்சி தத்துவத்துக்கும் இந்த நாட்டுக்கும் நல்லதாக அமையும்!