சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி 2–வது மாநில எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் என காட்டமாக விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்பது கலைஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த முழக்கம்! நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாற போகிறது! அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சியானது – மாநில உரிமைகள் வழங்கும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும்!
தி.மு.க. அரசை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, மாநில அரசு உரிமைகள் என்று நான் சொல்லவில்லை! மாநிலங்களை ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் – ஏன், பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்று, எல்லா மாநிலங்களுக்குமான உரிமையாகத்தான் கேட்கிறோம்! இதை இங்கு மட்டுமல்ல, அண்மையில் ஒன்றிய பிரதமர் திருச்சிக்கு வந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே இதை சொன்னவன், இந்த ஸ்டாலின்.
இன்றைக்கு பிரதமராக இருக்கும் அவர், ஒருகாலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியைத்தான் பிரதமராக வந்ததில் இருந்து மோடி அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்.
மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவைகளுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்டங்களை இயற்றுகிறது. எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனைச் செய்வது இல்லை. எதற்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேட்பது இல்லை. புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி என்று இவ்வாறு மாநிலங்களின் கல்வி – நிதி அதிகாரத்தை முற்றிலுமாக பறித்துவிட்டார்கள். ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள்.
மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட நமக்காக உதவிகள் செய்வது இல்லை. சமீபத்தில் வந்த பேரிடருக்கு, 37 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் ஒரு பைசா வரவில்லை.
பிரதமர் வந்தார் – தருவேன் என்றார்; நிதி அமைச்சர் வந்தார் – தருவேன் என்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தார் – தருவேன் என்றார்; உள்துறை அமைச்சரை நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் எம்.பி.க்கள் பார்த்தபோது அவரும் தருவேன் என்றார். ஆனால் இப்போது வரைக்கும் எதுவும் வரவில்லை!
இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘சும்மா திருக்குறள் சொன்னால் போதும். பொங்கல் கொண்டாடினால் போதும். அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்று ஏமாற்ற நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இது பெரியார் மண்! பேரறிஞர் அண்ணாவின் மண்! தலைவர் கலைஞரின் மண்!
மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இரண்டு முறை பிரதமர் ஆகியிருக்கிறார். இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவர் பிரதமராக வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவது இல்லை. இந்த முறை தமிழ்நாட்டைப் போலவே – இந்தியாவும் செயல்பட போகிறது.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், என்ன செய்கிறார்கள்? கட்சிகளை உடைப்பது! எம்.எல்.ஏ.க்களை இழுப்பது! ஆளுநர்கள் மூலமாகக் குறுக்கு வழியில் ஆட்சியை நடத்த பார்ப்பது! சொல்லப்போனால், பா.ஜ.க.விற்கு வேட்டு வைக்க வேற யாரும் வேண்டாம். ஆளுநர்களே போதும்! அவர்களே அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடித்திடுவார்கள்!
நாம் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி, ஒற்றைக்கட்சி ஆட்சியாக இருக்காது! சர்வாதிகார ஆட்சியாகவும் இருக்காது! கூட்டாட்சியாக இருக்கும்! மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும்! தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் ஆட்சியாக இருக்கும்! இந்தியாவை அனைத்து வகையிலும் முன்னேற்றும் ஆட்சியாக இருக்கும்! அதற்கான பணி நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது” என நம்பிக்கையுடன் சொல்லி முடித்தார்.