பள்ளிப்படிப்பில் மாணவர்களின் இடைநிற்றலை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு முக்கிய அம்சமாக, கல்வித்தகவல் மேலாண்மை முறையை (Educational Management InformationSystem – EMIS) பள்ளிக்கல்வித்துறை பின்பற்றுகிறது.
இந்த முறையின் கீழ், இணையதளத்தில் மாணவர்களின் முழு விவரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இடை நிற்றலைக் கண்டறிந்து, அவர்களைத் தொடர்ந்து படிக்க வைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் இடைநிற்றலுக்கு சாத்தியமாகிற மாணவர்கள் எனக் கண்டறியப்படுகிறது.
இடைநிற்றலைத் தடுக்க புதிய திட்டம்
இந்த இடைநிற்றலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வித் துறையின் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் ஏறக்குறைய மூன்று லட்சம் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. வறுமை, இடம்பெயர்தல், தேர்வு பயம் போன்ற ஏதாவது ஒரு காரணம், மாணவர்களை வேலைக்குச் செல்லவும், மாணவிகள் என்றால் சிறுவயது திருமணங்களுக்குத் தள்ளுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனை தடுக்கும் விதமாக, “ பள்ளிக்கல்வித் துறை கொண்டு வந்துள்ள ‘தலையிடும் திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், வரும் கல்வி ஆண்டிலிருந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுவினர் படிக்கும் மாணவர்களுடன் தவறாமல் தொடர்பில் இருப்பதோடு, அவர்கள் பதற்றமில்லாமல் படிக்கவும், படிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவுவார்கள்” என்கிறார் பள்ளிக்கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர்.
10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள் 40,000 பேர்
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில், 10, 12 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த சுமார் 62,000 மாணவர்களைப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது துணைத் தேர்வு எழுத ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.
அதேபோன்று இந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அப்படி மாநிலம் முழுவதும் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை எனத் தெரியவந்துள்ளது. இது பள்ளிக் கல்வித்துறை வட்டாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துணைத் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை
அதில், “தேர்வு எழுதாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை துணைத் தேர்வின் போது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலமாகவோ அல்லது வீடுகளுக்கு நேரில் சென்றோ தொடர்பு கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறவேண்டும்.
மேலும், தேர்வு எழுதாததற்கான காரணங்களைக் கண்டறிந்து, மீண்டும் தேர்வு எழுத சம்மதிக்க வைக்க வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைத்து, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பின்னர் அனைவரையும் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி பயிலவும் ஏற்பாடு
இதனிடையே தேர்வு எழுத, பள்ளிக்கு வராத மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதற்கு விரும்பினால், அவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும், வேறு காரணங்களால் வராமல் இருந்தால், அந்த மாணவரைத் துணைத் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தந்து, உயர்கல்வி படிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்படும் என்றும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜே.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.