மூடப்படும் மாஞ்சோலை எஸ்டேட்… முடிவுக்கு வரும் 100 ஆண்டுக் கால சகாப்தம்… தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு என்ன?
மாஞ்சோலை எஸ்டேட் என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள இந்த பகுதிகளின் பசுமை போர்த்திய அழகை காண கண் கோடி வேண்டும். அவ்வளவு கொள்ளை அழகுடன் காட்சியளிக்கும் இந்த மாஞ்சோலை எஸ்டேட், திருநெல்வேலியில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று மாஞ்சோலையை அடையலாம். மணிமுத்தாறிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள இந்த மாஞ்சோலை எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய மலைவாசஸ்தலமாகவும், சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாகவும் திகழ்கிறது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடுக்கில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கும் உயரே 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல் கோதையாறு (மேல் அணை கன்னியாகுமரி மாவட்டத்தின் அணை) போன்ற இடங்களில், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன. இப்பகுதியில் மலை உச்சிகளில் இருந்து மற்ற இடங்களை காணுதல் அருமையான ஒரு அனுபவமாக அமையும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மாஞ்சோலை எஸ்டேட் உருவானதன் பின்னணியில், பல்லாயிரக்கணக்கானவர்களுடைய உழைப்பும் தியாகமும் கொட்டிக்கிடக்கின்றது. 100 வருடங்களுக்கு முன்னர் எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லாத காலத்தில் கால்நடையாக சென்று பத்துக்கும் மேற்பட்ட மலை அடுக்குகளுக்கு அப்பால் கொடிய விலங்குகளின் தாக்குதலுக்கு இரையாகியும், பல்லாயிரக்கணக்கானவர்களுடைய உழைப்பாலும் தியாகத்தாலும் உருவானதுதான் ‘மாஞ்சோலை எஸ்டேட்’ எனப்படும் ‘ மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள்’.
மாஞ்சோலை எஸ்டேட் உருவான கதை
மாஞ்சோலை ஒரு பொது பெயராக இருந்தாலும், 100 கிலோமீட்டர் சுற்றளவில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலு முக்கு, ஊத்து, குதிரை வெட்டி என ஐந்து டிவிஷன்களையும் உள்ளடக்கியதாகும்.
இவ்வளவு வளமிக்க வனப்பகுதி ஒரு காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது. அது, ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ எனும் பிபிடிசி நிறுவனத்திற்கு கை மாறியதன் பின்னனியில் ஒரு கதை உள்ளது.
திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்தார். அப்படி இறந்தவருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலத்தை வழங்கினார். 32-ஆவது மன்னர், சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கொலை வழக்கில் சிக்கினார். வழக்கிற்கு நிறைய செலவானதால், அதை சமாளிக்க மலைநாட்டில் பரிசாக பெற்ற நிலத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பி.பி.டி.சி. நிறுவனத்திற்கு12.02.1929 அன்று, 99 வருடக் குத்தகைக்கு விட்டார். இப்படித்தான் மாஞ்சோலை தோட்டம், பி.பி.டி.சி. நிறுவனத்திற்கு கைமாறியது.
தோட்டம் தனது கைக்கு வந்த பின்னர் அந்த வனப்பகுதியில் அமைந்துள்ள காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக சீரமைத்து, அங்கு தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட ஆரம்பித்தது பி.பி.டி.சி. நிறுவனம். அந்தப் பணிகளுக்காகத் திருநெல்வேலி மற்றும் தற்போதைய தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ‘கங்காணிகள்’ எனப்படும் தரகர்கள் மூலமாக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். அப்படி அழைத்து வரப்பட்டவர்களின் வாரிசுகள் பலர் நான்கு தலைமுறைகளாக அங்கேயே வசித்து, அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது வரையிலும் கூலி வேலை செய்து வந்தனர்.
காப்புக்காடாக அறிவித்த வனத்துறை
இந்நிலையில், கடந்த 28.02.2018 அன்று மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட வனம் ‘காப்புக்காடாக’ அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, இது தொடர்பான தமிழக அரசின் அறிவிக்கையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட சில பரிகாரங்களுக்காக பி.பி.டி.சி நிர்வாகத்தால் வேறு வேறு காலகட்டங்களில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அந்த வழக்குகளின் தீர்ப்பினை 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதன் பின்னர், தமிழ்நாடு வனச் சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில் நிலுவையிலுள்ள குத்தகைத் தொகை மற்றும் மீதமுள்ள குத்தகை காலத்திற்கான வரிப்பணத்தை முன்கூட்டியே பி.பி.டி.சி நிர்வாகம் செலுத்தத் தவறும்பட்சத்தில், மீதமுள்ள ஆண்டுகள் எஸ்டேட் பகுதியைப் பயன்படுத்தவும், எஸ்டேட் தொடர்ந்து நீடிக்கவும் தடை விதிக்கப்படும் என்று வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவிக்கத் தொடங்கினார்கள்.
மூடப்படும் மாஞ்சோலை எஸ்டேட்
இந்த நிலையில் வனத்துறையினரின் தொடர் அழுத்தம், பி.பி.டி.சி நிறுவனத்தின் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம், குறைந்து போன தேயிலை விளைச்சல் உள்ளிட்ட சில காரணங்களால், குத்தகைக் காலம் 2028 வரை இருந்தாலும், மீதமிருக்கும் 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்காமல் முன்கூட்டியே வெளியேற முடிவு செய்துவிட்டது பி.பி.டி.சி நிறுவனம்.
தற்போது நாலுமுக்கு பகுதியில் மட்டுமே தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தேயிலை தொழிற்சாலையும், விரைவில் மூடி, ஒட்டுமொத்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டையும் வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் தீவிரமாக உள்ளது பி.பி.டி.சி. இதனால், இந்த எஸ்டேட்டையே நம்பி காலம் காலமாக பிழைப்பு நடத்தி வந்த, 7,000 பேர், தங்களது எதிர்காலம் என்னவாகுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.
தொழிலாளர்களின் கோரிக்கை
இந்த நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பணிக் குழுவினருடன் பி.பி.டி.சி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. “தாமாகவே முன்வந்து ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய விரும்புவோருக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரையிலான தீர்வுத் தொகையை வழங்க பி.பி.டி.சி ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி சமவெளிப் பகுதியில் நிலம் வாங்கவோ, வீடு கட்டவோ முடியாது. எனவே, நிறுவனத்திடம் இருந்து ஒரு பெரிய செட்டில்மென்ட் தொகையைப் பெறுவதற்கு மாநில அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” என்று எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது இந்த இழப்பீட்டுத் தொகையை வைத்துக்கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்திச் செல்ல கல்லிடைக்குறிச்சி, மானுார் அல்லது அம்பாசமுத்திரத்தில் வீடு கட்ட, அரசு தரப்பில் 4 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு கருணை காட்டும் என்று தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளனர்.