சென்னையை உலுக்கிவிட்டுச் சென்ற மிக்ஜாம் புயலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளமும் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ள போதிலும், இயல்பு வாழ்க்கை வேகமாக திரும்பிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய மழை, வெள்ள காலங்களில் மக்களுக்கு பொதுவாக ஏற்படக் கூடிய உடல் நலக்குறைபாடுகள், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் இங்கே…
முதலில் அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார் அளித்த பதில்கள்…
இதுபோன்ற மழை, வெள்ளத்திற்குப் பிறகு மக்களுக்கு ஏற்படக் கூடிய பொதுவான உடல்நலப் பிரச்னைகள் என்னவாக இருக்கும்?
முதலில் உளவியல் ரீதியாகப் பார்த்தால், பொதுவாக ஒரு பேரிழப்புக்குப் பிறகு ஏற்படக்கூடிய Post-Traumatic Stress Disorder (PTSD) என்று சொல்லக்கூடிய Disorder நிறையப் பேருக்கு வருவது உண்டு. படகில் மீட்கப்பட்டவர்கள், மூன்று, நான்கு நாட்கள் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்தவர்களுக்கு இந்த தாக்கம் இருக்கும். மனம் சார்ந்து இந்த தாக்கத்திலிருந்து மக்கள் வெளிவர சில வாரங்கள் ஆகும். தண்ணீரிலிருந்தவர்களுக்கு காலில் சேற்றுப் புண் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதைத் தாண்டி தண்ணீரால் தொற்று நோய்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது.
நீர்வழியாக எத்தகைய நோய்கள் பரவும்? கேன் வாட்டரை அப்படியே குடிக்கலாமா அல்லது அதையும் காய்ச்சி தான் குடிக்க வேண்டுமா?
நீரிலிருக்கும் கொசுக்களின் முட்டைகள் மூலமாக மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. எந்த தண்ணீராக இருந்தாலும் அதை காய்ச்சி தான் குடிக்கவேண்டும். நீர்க் குமிழிகள் வரும் அளவிற்குத் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதன்பிறகு பயன்படுத்தவேண்டும்.
நீர் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, மக்கள் எத்தகைய முன்னெச்சரிக்கை அல்லது தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்?
தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் முதல் சிறந்த வழி. தண்ணீரில் நெல்லி வற்றலை ஊறவைத்து பின்னர் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். பாலில் மிளகு, மஞ்சள் கலந்து குடிக்கலாம். அதிமதுரத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
இத்தகைய நாட்களில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்குக் குறிப்பிட்ட உடல் நல பிரச்னைகள் ஏதும் ஏற்படுமா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நிமோனியா வர வாய்ப்பிருக்கிறது. இது மழையினால் இல்லை. இந்த பருவத்தில் நிமோனியா பரவி வருகிறது. முதியவர்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது. நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகப்படுத்தக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை இப்போதைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில் சளி, காய்ச்சல் தொடங்குகிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
எத்தகைய நோயாளிகளுக்கு இதுபோன்ற மழைக் காலங்களில் கூடுதல் பிரச்னைகள் ஏற்படும்? அவர்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?
ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்குக் கொஞ்சம் கூடுதல் சிரமம் ஏற்படும். எப்போதும் கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிப்பது, வெளியில் செல்லும்போது தலை, முகத்தை மூடிக்கொள்வது, குளிக்கும்போதுகூட சுடு தண்ணீரைப் பயன்படுத்துவது, குளிரான பகுதிக்குச் செல்லாமல் இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடித்தால் அவர்களுக்குக் கூடுதல் சிரமம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அடுத்ததாக பொதுநலன் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அளித்த சில ஆலோசனைகள்…
மழைக் காலங்களில் வீட்டின் முதலுதவி பெட்டியில் கட்டாயம் இருக்க வேண்டிய மருந்துகள் என்னென்ன?
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோயாளிகள் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கான மாத்திரைகளை முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கவேண்டும். மற்றவர்களுக்குக் காய்ச்சலுக்குரிய Paracetamol, குழந்தைகளுக்கான டானிக் போன்றவை இருக்கவேண்டும். அதுபோல வாந்தி, வயிற்றுப்போக்கு மாத்திரைகள் இருக்கவேண்டும்.
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
உடல் வெளியே தெரியாத அளவுக்கு முழு உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். தூங்கும்போது கொசு வலைக்குள் தூங்கவேண்டும். Odomos போட்டுக்கொண்டு தூங்கச் செல்லவேண்டும்.
தவிர்க்க முடியாமல் வெள்ள நீர் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
வீட்டிற்கு வந்தவுடன் நம் கை, கால்களை சோப்பைப் பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும். முடிந்த அளவிற்கு பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரால் கை, கால்களைக் கழுவுவது நல்லது.
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி, அங்கு மீண்டும் செல்லும்போது வீடு மற்றும் உடைமைகளைச் சுத்தம் செய்யவும் கிருமிகள் நீக்கம் செய்யவும் குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளதா? என்ன செய்ய வேண்டும்?
வீடுகளில் தண்ணீர் வடிந்த பிறகு 1 லிட்டர் தண்ணீரில் 35 கிராம் பிளீச்சிங் பவுடரை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பெயர் stock solution என்று பெயர். அந்த solution -ஐ ஒரு லிட்டருக்கு 6 மில்லி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து வீட்டை சுத்தம் செய்யவேண்டும். அப்படி செய்தால் வெள்ளத்தால் வீடுகளில் தங்கியிருக்கும் கிருமிகள் சாகும். நமக்கும் உடல்நல பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும்.
வெள்ள நீர் மற்றும் அசுத்தமான சுற்றுச்சூழலினால் ஏற்படும் நீண்ட கால ஆரோக்கிய பாதிப்புகள் என்ன? இதிலிருந்து ஒருவர் எப்படி தற்காத்துக் கொள்ள முடியும்?
மழைக் காலத்தில் அலர்ஜி தரக்கூடிய பூஞ்சைகள் வளரும். இதைக் காற்றின் வழியாகச் சுவாசிக்கும் போது பல பேருக்கு நுரையீரல் தொற்று ஏற்படும். ஆஸ்துமா இருப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும். முடிந்த அளவுக்குப் பூஞ்சைகள் வளர தொடங்கியதும் அதைச் சுத்தம் செய்திட வேண்டும். அதன்பிறகு ஆஸ்துமா இருப்பவர்கள் மருத்துவர்களைச் சந்தித்து முன்னெச்சரிக்கை மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதுபோல நீரிழிவு நோயாளிகளுக்குக் காலில் புண் ஏற்படும். அந்த புண்களுக்குச் சரியான முறையில் சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொற்று ஏற்பட்டு பெரிய அளவில் பிரச்னை ஏற்படக் கூடும்.