நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக இம்மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேசி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டுள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் அதிக அளவு தண்ணீர் மற்றும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை கொக்கிரக்குளம் அருகிலுள்ள சுலோச்சனா முதலியார் மேம்பாலத்தையும் மூழ்கடித்தபடி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அதேபோன்று நெல்லை டவுன் செல்லும் வழியில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலையும் மூழ்கடித்தபடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அதேபோன்று நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் பாதையின் இருபுறங்களிலும் உள்ள கடைகள் வெள்ள நீரில் மூழ்கி நிற்கின்றன. குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. நெல்லையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு கனமழை கொட்டி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாங்கி உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில், திருநெல்வேலி – தூத்துக்குடியை இணைக்கும் ரயில் பாதை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பழுதாகி உள்ளது. காயல்பட்டினத்தில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு இயந்திரம் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 4 மாவட்ட மீட்புப் பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரிகளாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
கன்னியாகுமரி-நாகராஜன், நெல்லை – செல்வராஜ், தூத்துக்குடி- ஜோதி நிர்மலா , தென்காசி-சுன்சோங்கம் ஜதக் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர். களத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே .எஸ்.எஸ்.ஆர் உள்ளனர்.
இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் துரிதப்படுத்த இன்று கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன், மூர்த்தி ஆகியோரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். அதேபோன்று திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அக்கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், கட்சியினரும் களத்தில் இறங்கி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் விரைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்கள் கொண்ட தலா இரண்டு குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக விரைந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 90 வீரர்கள் கொண்டு3 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதிகனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.18 லட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள்குறித்த விவரங்களை தெரிவிக்க தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.
எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், @tn_rescuerelief என்ற எக்ஸ் தள முகவரியிலும் தொடர்புகொண்டு கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.